2ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் இளையோரிடம் வீழ்ந்தது இலங்கை

Bangladesh U19 Tour Of Sri Lanka 2025

2
Bangladesh U19 Tour of Sri Lanka

இலங்கை 19 வயதின்கீழ் அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி இலகு வெற்றியைப் பதிவு செய்தது.

சவாத் அப்ராரின் அபார சதம், அஸிஸுல் ஹக்கிமின் அரைச் சதம் மற்றும் அல் பஹாத்தின் 6 விக்கெட் குவியல் என்பன பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

இதன்படி, ஆறு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் 1 – 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, CCC மைதானத்தில் நேற்று (28) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதின்கீழ் அணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் சாமிக்க ஹீனட்டிகல 51 ஓட்டங்களையும் தினுர தம்சித் 47 ஓட்டங்களையும் திமன்த மஹாவித்தான 39 ஓட்டங்களையும் துல்னித் சிகேரா 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் அல் பஹாத் 44 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும், இக்பால் ஹொசைன் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி 34.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் சவாத் அப்ரார் 106 பந்துகளில் 14 பௌண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 130 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் அஸிஸுல் ஹக்கீம் 69 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இளையோர் ஒருநாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (01) கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<