எமது தளமான ThePapare.com இற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு T-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
தற்போது தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் விளையாடிக்கொண்டிருக்கும் இலங்கை அணி, அதனை அடுத்து இடம்பெற இருக்கும் அவுஸ்திரேலியாவுடனான T-20 தொடரினை முடித்த பின்னர், பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் நாடு திரும்ப உள்ளது.
இந்நிலையில் நியூஸிலாந்து அணியுடன் தற்சமயம் விளையாடிக்கொண்டிருக்கும் பங்களாதேஷ் அணி, இம்மாத இறுதியில் அத்தொடரை முடித்துக்கொண்டு, அடுத்து பெப்ரவரி மாதம் இந்திய மண்ணில் முதன் முறையாக விளையாட இருக்கும் டெஸ்ட் போட்டியினையும், இலங்கை அணியுடனான இத்தொடருக்கு முன்னதாக நிறைவு செய்யும்.
2000ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் பங்களாதேஷ் அணி ஒரு போட்டியில் கூட இலங்கை அணியினை வெற்றி கொண்டது இல்லை. எனவே, நடைபெற இருக்கும் இத்தொடர் சுவாரசியமான தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடரில் அவர்கள் இலங்கை அணியினை வெற்றி கொண்டு வரலாற்றினை மாற்றுவர்களா என்பதனையும் பொறுத்திருந்த பார்க்க வேண்டும். ஏனெனில் பங்களாதேஷ் கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்தில் அவர்களது மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியினை முதல் தடவையாக வீழ்த்தி அவ்வணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தது.
அத்தொடரில் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கையின் சந்திக்க கதுருசிங்க செயற்பட்டார். கடந்த ஒன்றரை வருடங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்களாதேஷ் அணி நல்ல திறமையைக் (Form) காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக 2013ஆம் ஆண்டு, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் அணி டெஸ்ட் தொடரினை 1-0 என தோல்வியுற்றதுடன், ஒரு நாள் தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தி இருந்தது. அதன் பின்னர் நடைபெற்ற ஒரேயொரு T-20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
கடந்த வருடம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக, இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்றிருந்த காலி சர்வதேச மைதானத்தில், முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான ‘பிக் மெட்ச் (BIG MATCH)’ என அழைக்கப்படும் கிரிக்கெட் தொடரின் பருவ காலத்தில் இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ளது. இதன் பின்னர், இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற, கொழும்பு P. சரவணமுத்து மைதானம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக, 2015ஆம் ஆண்டு இறுதி ஒரு நாள் போட்டி இடம்பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை சர்வதேச மைதானத்தில் இத்தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, மிகுதி இரண்டு ஒரு நாள் போட்டிகளும் தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இடம்பெறும். பின்னர் கடைசி இரண்டு T-20 போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன.
எதிர்பார்க்கப்படும் போட்டித்தொடரின் அட்டவணை
முதலாவது டெஸ்ட் போட்டி – மார்ச் 7 – காலி சர்வதேச மைதானம்
இரண்டாவது டெஸ்ட் போட்டி – மார்ச் 15 – P. சரவணமுத்து மைதானம்
முதலாவது ஒரு நாள் (ODI) போட்டி – மார்ச் 25 – மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானம், ஹம்பாந்தோட்டை
இரண்டாவது ஒரு நாள் (ODI) போட்டி – மார்ச் 29 – ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானம்
மூன்றாவது ஒரு நாள் (ODI) போட்டி – ஏப்ரல் 1 – ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானம்
முதலாவது T-20 போட்டி – ஏப்ரல் 5 – ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானம், கொழும்பு
இரண்டாவது T-20 போட்டி – ஏப்ரல் 8 – ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானம், கொழும்பு