சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 469 ஓட்டங்களை குவித்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் நாள் ஆட்டநேர நிறைவில், ஒரு விக்கெட்டினை இழந்து 291 ஓட்டங்களை பெற்றிருந்தது.
டெஸ்ட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டிய திமுத், திரிமான்ன
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், ரமேஷ் மெண்டிஸ், ப்ரவீன் ஜயவிக்ரம, விஷ்வ பெர்னாண்டோ
பங்களாதேஷ் அணி
தமிம் இக்பால், சயிப் ஹசன், நஜ்முல் ஹுசைன் செண்டோ, மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், லிடன் டாஸ், மெஹிடி ஹாசன், தாஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட், அபு ஜெயட், சொரிபுல் இஸ்லாம்
இலங்கை அணிசார்பாக 131 ஓட்டங்களுடன் லஹிரு திரிமான்ன களமிறங்க, 40 ஓட்டங்களுடன் ஓசத பெர்னாண்டோ களமிறங்கினார். நேற்றைய தினம் இலங்கை அணி மிகச்சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றிருந் நிலையில், இன்றைய தினம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
மதியபோசன இடைவேளைக்கு முன்னர் பங்களாதேஷ் அணி அபாரமாக பந்துவீசியது. இதில், 140 ஓட்டங்களை பெற்றவேளை லஹிரு திரிமான்ன ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா வந்தவேகத்தில் ஆட்டமிழந்தனர்.
எனினும், மறுமனையில் துடுப்பெடுத்தாடிய ஓசத பெர்னாண்டோ, மூன்றாவது டெஸ்ட் அரைச்சதத்தை பதிவுசெய்ய, மதியபோசன இடைவேளையின் போது, 4 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக்கொண்டது.
பின்னர், மதியேபோசன இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய இலங்கை அணிசார்பில், ஓசத பெர்னாண்டோ மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் நிதானமாக ஓட்டங்களை பகிர்ந்தனர். எனினும், துரதிஷ்டவசமாக பெதும் நிஸ்ஸங்க 30 ஓட்டங்களுடன் டஸ்கின் அஹமட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 81 ஓட்டங்களை பெற்றிருந்த ஓசத பெர்னாண்டோ சதத்தை பெறமுடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து நிரோஷன் டிக்வெல்ல மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் களமிறங்க போட்டியில் தேநீர் இடைவேளை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஓட்டங்களை சற்று வேகமாக நிரோஷன் டிக்வெல்ல குவிக்கத்தொடங்கினார்.
இதற்கிடையில் போட்டியில் மழைக்குறுக்கிட்ட போதும், சில நிமிடங்களில் போட்டி ஆரம்பமானது. இதனையடுத்து, நிரோஷன் டிக்வெல்ல தன்னுடைய 18வது டெஸ்ட் அரைச்சதத்தை பதிவுசெய்ததுடன், ஓட்டங்கள் சற்று வேகமாக பெறப்பட்டது. எனினும், துரதிஷ்டவசமாக போட்டியானது போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட, ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
அதன்படி, இன்றைய ஆட்டநேர நிறைவில், இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 469 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், நிரோஷன் டிக்வெல்ல 64 ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் 22 ஓட்டங்களையும் அட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில், டஸ்கின் அஹமட் 3 விக்கெட்டுகளை அதிபட்சமாக வீழ்த்தினார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…