பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள அனைத்து வகை போட்டிகளையும் கொண்ட தொடரின் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த சுற்றுப் பயணமானது இரண்டு நாட்களைக் கொண்ட பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானதில் நடைபெறவுள்ளதுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியை கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடாதுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றைத் தொடர்ந்து மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் இறுதியாக இரண்டு T-2௦ போட்டிகளிலும் இவ்விரு அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன.
கடந்த 2௦16ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை 3-௦ என்ற கணக்கில் வைட் வொஷ் செய்த இலங்கை அணி வரலாற்று சாதனையொன்றை உள்ளூர் மண்ணில் புரிந்தது.
அதேநேரம், 17 வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி, இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது. எனினும், கடந்த வருடம் அவர்களது சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியை வென்று தமது டெஸ்ட் அணியின் பலத்தை அவர்கள் நிரூபித்திருந்தமை இங்கு நினைவு கூறத் தக்கது.
இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இறுதியாக 2௦14ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றதுடன், அதில் ஒரு போட்டியில் இலங்கை அணி 248 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அதேநேரம், இரண்டாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
இரண்டு நாட்களைக் கொண்ட பயிற்சிப் போட்டி: மார்ச் 2ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை – மொறட்டுவ கிரிக்கெட் மைதானம்
முதல் டெஸ்ட் போட்டி: மார்ச் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம்
இரண்டாவது டெஸ்ட் போட்டி: மார்ச் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை – கொழும்பு, பி. சரா ஓவல் மைதானம்
ஒருநாள் பயிற்சிப் போட்டி : மார்ச் 22ஆம் திகதி -கொழும்பு
முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி: மார்ச் 25ஆம் திகதி தம்புல்ல சர்வதேச கிரிக்கெட் மைதானம் (பகலிரவு போட்டி)
இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி: மார்ச் 28ஆம் திகதி தம்புல்ல (பகலிரவு போட்டி)
மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி: ஏப்ரல் 1ஆம் திகதி – SSC மைதானம் கொழும்பு
முதலாவது T-2௦ போட்டி: ஏப்ரல் 4ஆம் திகதி – ஆர். பிரேமதாச சரவதேச கிரிக்கெட் அரங்கம்
இரண்டாவது T-2௦ போட்டி: ஏப்ரல் 6ஆம் திகதி ஆர். பிரேமதாச சரவதேச கிரிக்கெட் அரங்கம்