ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என முன்னிலை வகித்துள்ளது.
இராவல்பிண்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பங்களாதேஷ் அணிக்கு வழங்கியது.
இலங்கையரின் பயிற்றுவிப்பில் பங்களாதேஷுக்கு கன்னி உலகக் கிண்ணம்
ஐ.சி.சி இளையோர் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான …
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு முகங்கொடுக்க தடுமாறியதுடன், 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபட்சமாக மொஹமட் மிதுன் 63 ஓட்டங்களையும், நஜ்முல் ஹுசைன் சென்டோ 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் மிக துள்ளியமாக பந்துவீசியிருந்தனர். இதில், சஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்த, மொஹமட் அபாஸ் மற்றும் ஹரிஸ் சொஹைல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நஷீம் ஷா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, பாபர் அஷாம் மற்றும் ஷான் மசூட் ஆகியோரின் சதங்கள் மற்றும் ஏனைய துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான பங்களிப்புடன், 445 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.
பாபர் அஷாம் அதிகபட்சமாக 143 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஷான் மசூட் 100 ஓட்டங்கள், ஹரிஸ் சொஹைல் 75 ஓட்டங்கள் மற்றும் அசாட் சபீக் 65 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் அபு ஜெயட் மற்றும் ரூபல் ஹுசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.
தொடர்ந்து 212 என்ற பின்னடைவில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 3வது நாள் ஆட்டநேர நிறைவில் 126 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், இன்றைய தினம் 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் இன்னிங்ஸ் அடிப்படையில் தோல்வியை தழுவியது.
இரண்டாவது இன்னிங்ஸில் அணித் தலைவர் மொமினுல் ஹக் 41 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, நஜ்முல் ஹுசைன் சென்டோ 38 ஓட்டங்களை பெற்றார். பாகிஸ்தான் அணியை பொருத்தவரை, இளம் வயதில் டெஸ்ட் ஹெட்ரிக்கை கைப்பற்றியவர் என்ற சாதனையை பதிவுசெய்த நஷீம் ஷா 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, யசீர் ஷா தனது பங்கிற்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
த்ரில் வெற்றியுடன் ஒருநாள் தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக வொண்டரஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற …
இவ்வாறான நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் ஒரு போட்டிக்கான 60 புள்ளிகளை முழுமையாக பெற்றுக்கொண்டது. அத்துடன், 140 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியை விட 6 புள்ளிகள் பின்தங்கி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.
அதேநேம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி சுருக்கம்
பங்களாதேஷ் – 233/10, மொஹமட் மிதுன் 63, நஜ்முல் ஹுசைன் சென்டோ 44, சஹீன் ஷா அப்ரிடி 53/4, ஹரிஸ் சொஹைல் 11/2
பாகிஸ்தான் – 445/10, பாபர் அஷாம் 143, ஷான் மசூட் 100, ஹரிஸ் சொஹைல் 75, அசாட் சபீக் 65, அபு ஜெயட் 86/3 ரூபல் ஹுசைன் 113/3
பங்களாதேஷ் – 168/10, மொமினுல் ஹக் 41, நஜ்முல் ஹுசைன் சென்டோ 38, நஷீம் ஷா 26/4, யசீர் ஷா 58/4
முடிவு – பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 44 ஓட்டங்கள் வித்தயாசத்தில் வெற்றி
ஆட்ட நாயகன் – நஷீம் ஷா
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…