இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் சகீப் அல் ஹஸன் இணைக்கப்பட்டிருப்பதோடு, இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இருந்து ‘உடனடியாக’ நாடு திரும்பும்படி அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு
கிரிக்கெட் உலகக் கிண்ணத்…
உலகக் கிண்ண போட்டிகள் வரும் மே 30 தொடக்கம் ஜூலை 14 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து அணிகளும் தமது அணிகளைத் தயார்படுத்தி வரும் நிலையில், சில அணிகள் தமது இறுதிக் குழாத்தினை அறிவித்துள்ளன. இந்நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் தேர்வுக் குழு உலகக் கிண்ணத்திற்கான தமது குழாத்தினை இன்று (16) அறிவித்துள்ளது.
32 வயதான பங்களாதேஷ் அணியின் தீர்க்கமான சகதுறை வீரரான சகீப் அல் ஹஸன் கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. அந்த ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணி 0-3 என வைட்வொஷ் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், இந்த பருவத்திற்காக ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி இதுவரை ஆடிய ஏழு போட்டிகளில் கடந்த மார்ச் 24 ஆம் திகதி நடைபெற்ற ஆட்டத்தில் மாத்தரம் அவர் ஆடியிருந்தார்.
“எமது குழாம் தயாராகிவிட்டது” என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஷ்முல் ஹஸன் குறிப்பிட்டார். “ஷகீப்பை உடன் நாடு திரும்பும்படி கோரி நான் கடிதம் ஒன்றை அனுப்பினேன். அவர் அதற்கு எப்படி பதிலளிப்பார் என்று பார்ப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்ற சகலதுறை வீரரான சகீப் அல் ஹஸன் 195 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 5,577 ஓட்டங்களை பெற்று 35.07 என்ற ஓட்ட சராசரியையும், 247 விக்கெட்டுகளை வீழ்த்தி 29.68 என்ற பந்துவீச்சு சராசரியையும் கொண்டவராவார்.
மஷ்ரபி மோர்தஸா தலைமையிலான உலகக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் அணியில் ஷகீப் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று, ஒருநாள் அனுபவம் அற்ற வலதுகை வேகப்பந்து வீச்சாளர் அபூ ஜயெத்தும் 15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2018 ஜூலை மாதம் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடிய ஜயெத் இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியபோதும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்தை நேர்த்தியாக ஸ்விங் செய்யும் திறன் அவர் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெற சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குழாத்தில் இடம்பெற்ற மற்றொரு எதிர்பாராத இணைப்பாக மொசதக் ஹொஸைன் உள்ளார். அவர் கடைசியாக 2018 இல் ஆசிய கிண்ணத்தில் ஆடினார். போட்டிகளில் சோபிக்கத் தவறிய அவர் பங்களாதேஷ் அணியில் இருந்து தொடர்ந்து கழற்றிவிடப்பட்டார். எனினும் உலகக் கிண்ணத்திற்கான திட்டத்தில் அவர் முக்கியமானவராக இருப்பதாக தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் குறிப்பிட்டார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சகிப் அல் ஹசன் நீக்கம்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின்…
எஞ்சிய பங்களாதேஷ் குழாத்தில் இளம் வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். லிடோன் தாஸ், மஹிதி ஹஸன் மிராஸ், மொஹமது சைபுத்தீன், முஸ்தபிசுர் ரஹ்மான், சௌமியா சர்கார் மற்றும் ஜயெத் ஆகிய அனைவரும் 25 அல்லது அதற்கு குறைவான வயது கொண்டவர்களாவர்.
கடைசியாக நடைபெற்ற 2015 உலகக் கிண்ணப் போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய பங்களாதேஷ் அணி வரும் ஜூன் 2 ஆம் திகதி ஓவலில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியுடன் இம்முறை உலகக் கிண்ணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
பங்களாதேஷ் உலகக் கிண்ண குழாம்
மஷ்ரபி மோர்தஸா (தலைவர்), தமீம் இக்பால், லிடோன் தாஸ், சௌம்யா சார்கர், முஷ்பீகுர் ரஹிம், மஹ்மூதுல்லாஹ், ஷகீப் அல் ஹஸன், மொஹமது மிதுன், சப்பிர் ராமன், மொசதக் ஹொஸைன், மொஹமது சைபுத்தீன், மஹிதி ஹஸன், ரூபெல் ஹொஸைன், முஸ்தபிசுர் ரஹ்மான், அபூ ஜயெத்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<