ஆசிய கிண்ண பங்களாதேஷ் குழாமில் இரு வீரர்கள் இணைப்பு

359

ஆசிய கிண்ணத் தொடரில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்றிருக்கும் பங்களாதேஷ் தனது குழாமில் சௌம்யா சார்கர் மற்றும் இம்ருல் கயிஸ் ஆகியோரை இணைத்துள்ளது.

ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணியை வென்ற பங்களாதேஷ் ஆப்கானிஸ்தானிடம் 136 ஓட்டங்களால் மோசமான தோல்வியை சந்தித்ததோடு கடந்த வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற ‘சுப்பர் 4’ போட்டியில் இந்தியாவிடம் 7 விக்கெட்டுகளால் தோல்வி அடைந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் அந்த அணி முறையே 119 மற்றும் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.  

இலங்ககைக்கு எதிராக வெற்றி பெற்ற போட்டியிலும் கூட, அந்த அணி பெற்ற 261 ஓட்டங்களில் முஷ்பீகுர் ரஹிம் (144) மற்றும் மொஹமது மிதுன் (63) ஆகிய இரு துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமே சோபித்ததோடு வேறு எந்த வீரரும் 15 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை.   

“சுபர் 4” சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி இலகு வெற்றி

இவை தவிர, உபாதைகளாலும் பங்களாதேஷ் அணி தடுமாறி வருகிறது. மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்ட தமீம் இக்பால் நாடு திரும்பி இருப்பதோடு சகிப் அல் ஹஸன் (விரல்) மற்றும் ரஹிம் (இடுப்பு) ஆகியோரும் உபாதையால் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் பங்களாதேஷ் குழாமிற்கு அதிரடியாக அழைக்கப்பட்டிருக்கும் 25 வயதுடைய சார்கர் மற்றும் 31 வயதுடைய கைஸ் கடைசியாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2017 ஓக்டோபர் மாதமே ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஒருநாள் போட்டிகளில் சார்கரின் துடுப்பாட்ட சராசரி 34.53 என்பதோடு இடதுகை துடுப்பாட்ட வீர்ரான கைஸின் துடுப்பாட்ட சராசரி 28.95 ஆகும்.  

இந்த இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வருவதோடு மற்றை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லிடன் தாஸ் மற்றும் நஸ்முல் ஹொஸைன் கடந்த ஐந்து இன்னிங்ஸ்களில் அவர்களுக்கு இடையில் ஏழு ஓட்டங்களை தாண்டியதில்லை.   

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்ற பின்னர் கருத்து வெளியிட்ட அணித்தலைவர் மஷ்ரபி மொர்தஸா, முதல் 15 வீரர்களுக்கான தேர்வில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராயவிருப்பதாக குறிப்பிட்டார். அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தீர்க்கமான போட்டி பற்றி கூறும்போது, ”தற்போது விளையாடுபவர்களுக்கு அல்லது வரவிருப்பவர்களுக்கு இலகுவானதாக இருக்காது” என்றார்.  

”அனைத்து சர்வதேச போட்டிகளும் கடினமானது. சிறப்பாக துடுப்பெடுத்தாடி நன்றாக பந்துவீசுவதன் மூலமே மீண்டும் போட்டிக்கு திரும்ப முடியும். எதுவும் முடியாத ஒன்றல்ல, யார் விளையாடினாலும் சற்று பொறுப்புடன் விளையாட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் குழாம்

மஷ்ரபி மொர்தசா (தலைவர்), சகீப் அல் ஹஸன் (உப தலைவர்), மொஹமது மிதுன், லிடன் தாஸ், முஷ்பீகுர் ரஹீம் (விக்கெட் காப்பாளர்), ஆரிபுல் ஹக், மஹ்மதுல்லாஹ், மொசதிக் ஹொஸைன், நஸ்முல் ஹொஸைன், மஹிதி ஹஸன் மிராஸ், நஸ்முல் இஸ்லாம், ருபல் ஹொஸைன், முஸ்தபிசுர் ரஹ்மான், அபூ ஹைதர், மொமினுல் ஹக், சௌம்யா சர்கார், இம்ருல் கைஸ்.