19 வயதின் கீழ் ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் அணியை 195 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பங்களாஷ் அணி முதல் தடவையாக இளையோர் சம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
அஷிக்குர் ரஹ்மான் ஷிப்லி குவித்த அபார சதம், ரொஹானத் தௌல்லா போசன், மாறூப் ம்ரிதா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன பங்களாதேஷ் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
எட்டு நாடுகள் பங்குபற்றிய 19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியனைத் தீர்மானிக்கும் பங்களாதேஷுக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைக் குவித்தது.
பங்களாதேஷ் அணி சார்பாக அஷிக்குர் ரஹ்மான் ஷிப்லி, 149 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 12 பௌண்டரிகளுடன் 129 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.
பந்துவீச்சில் அய்மான் அஹமட் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஓமித் ரெஹ்மான் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும் இலங்கை
- இணை சம்பியன்களாக முடிசூடிய அசோக வித்தியாலயம், யாழ். மத்தி!
இதனையடுத்து 283 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி, 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 87 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
பந்துவீச்சில் ரொஹானத் தௌல்லா போசன் மற்றும் மாறுப் ம்ரிதா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், ஷெய்க் பாவெஸ் ஜிபொன் மற்றும் இக்பால் ஹொசெயன் ஈமொன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இம்முறை 19 வயதின் கீழ் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தோல்வி அடையாத அணியாக சம்பியனாகிய பங்களாதேஷ் அணி, 34 ஆண்டு கால இளையோர் ஆசியக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக சம்பியனாகி புது வரலாறு படைத்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத்தை பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் அஷிக்குர் ரஹ்மான் ஷிப்லி வென்றெடுத்தார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<