இலங்கையின் முன்னாள் பயிற்சியாளரை தமக்காக எடுக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

331

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளரான ஜோன் லூயிஸை, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் செய்திருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) அறிவித்திருக்கின்றது. 

>> கட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடவுள்ள இங்கிலாந்து!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்திருந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நெய்ல் மெக்கென்சி தனது குடும்பப் பொறுப்புக்களை கருத்திற்கொண்டு கடந்த ஒகஸ்ட் மாதம் பதவி விலகியிருந்தார். 

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக தமது அணிக்கான புதிய துடுப்பாட்டப் பயிற்சியாளர் ஒருவரினை தேடிவந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அனுபவ விடயங்களை கருத்திற் கொண்டு இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த ஜோன் லூயிஸினைத் தெரிவு செய்திருக்கின்றது.

ஜோன் லூயிஸ் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்ட விடயம் தொடர்பில் ESPNcricinfo செய்திச்சேவையிடம் கருத்து வெளியிட்ட, அந்நாட்டு கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரிகளில் ஒருவரான அக்ரம் கான் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

”அவர் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இங்கே (பங்களாதேஷிற்கு) வருகின்றார். அதன் பின்னர், நாங்கள் அவருடன் நேரடியாக கலந்துரையாடுவோம். எமது பட்டியலில் மூன்று, நான்கு பயிற்சியாளர்கள் இருந்தனர். எனினும், நாம் அவரின் (ஜோன் லூயிஸின்) அனுபவத்தினைக் கருத்திற்கொண்டிருக்கின்றோம்.”

அதேநேரம், தற்போதைய உலகில் கொவிட்-19 வைரஸ் காரணமாக நிலவி வருகின்ற சிக்கலான நிலைமைகளை கருத்திற்கொண்டு ஜோன் லூயிஸிற்கு நீண்ட காலத்திற்கான ஒப்பந்தம் ஒன்றை தற்போது வழங்கவில்லை என்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை குறிப்பிட்டிருக்கின்றது. 

>> அபுதாபி T10 லீக்கில் சங்கக்காரவுக்கு புதிய பதவி

அதன்படி, ஜோன் லூயிஸின் பதவிக்காலம் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அடுத்ததாக பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆகியவற்றுக்கு எதிரான இருதரப்பு தொடர்களின் பின்னரே தீர்மானிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இரண்டு தசாப்தங்களாக இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜோன் லூயிஸ், 16 முதல்தரச் சதங்களை விளாசியிருப்பதோடு சர்வதேச கிரிக்கெட் அணிகள் பலவற்றினையும் பயிற்றுவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, பங்களாதேஷ் அணி அடுத்ததாக பங்கெடுக்கின்ற இருதரப்பு கிரிக்கெட் தொடர் இம்மாதம் 20ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஆரம்பமாகின்றது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<