இலங்கையின் முன்னாள் பயிற்சியாளர் பங்களாதேஷ் அணியில்

605

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான நிக் போதாஸை அந்நாட்டு கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிராக எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போது அவர் அவ்வணியுடன் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் நிக் போதாஸ் கருத்து தெரிவிக்கையில்,

‘பங்களாதேஷ் அணியுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் மிகவும் பெருமைப்படுகிறேன். பங்களாதேஷ் முழுவதும் உள்ள திறமைகளின் ஆழம் மற்றும் அதன் பரந்த தன்மை மிகவும் முக்கியத்துவம் உடையதாக காணப்படுவதுடன், அற்புதமான சில ஆண்டுகள் எமக்கு முன்னால் இருப்பதாக நான் நம்புகிறேன்’ என தெரிவித்தார்.

49 வயதான நிக் போதாஸ், கடந்த 6 ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அவர் இறுதியாக ஹெம்ப்ஷெயர் அணியின் விக்கெட் காப்பு பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார்.

கடந்த 2000ஆம் ஆண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் தென்னாபிரிக்கா அணிக்காக ஆடியுள்ள அவர், 2011 வரை 218 முதல்தர போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 79 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சந்திக ஹதுருசிங்க அண்மையில் நியமிக்கப்பட்டதுடன், ஆலன் டொனால்ட் (வேகப் பந்துவீச்சு பயிற்சியாளர்), ரங்கன ஹேரத் (சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர்), ஜேமி சிடன்ஸ் (துடுப்பாட்ட பயிற்சியாளர்) மற்றும் ஷேன் மெக்டெர்மொட் (களத்தடுப்பு பயிற்சியாளர்) ஆகியோர் அந்த அணியின் பயிற்சியாளர் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, 2023 ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக்கில் இதுவரை 21 போட்டிகளில் ஆடி 13இல் வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக்கில் அந்த அணி பங்கேற்கவுள்ள கடைசி தொடராக அயர்லாந்து அணியுடனான ஒருநாள் தொடர் அமையவுள்ளது. இந்த 3 போட்டிகளும் மே 9, 12 மற்றும் 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<