இலங்கையினால் முன்னேற்றம் கண்ட பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள்

296
AFP

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையினை வெளியிட்டிருக்கின்றது.

வெளியிடப்பட்டிருக்கும் புதிய தரவரிசையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினுடைய வீரர்கள் முன்னேற்றம் காண்பித்திருக்கின்றனர்.

Video – இலங்கையுடன் அதிக T20 போட்டிகளில் விளையாடுமா இந்தியா?| Sports RoundUp – Epi 162

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், நேற்று (25) மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க பங்களாதேஷ் அணி 2-0 எனக் கைப்பற்றி இலங்கை அணிக்கு எதிராக தமது முதல் ஒருநாள் தொடர் வெற்றியினைப் பதிவு செய்து வரலாறு படைத்திருந்தது.

இந்த வரலாற்று வெற்றியினை பங்களாதேஷ் அணி பெற்றுக் கொள்ள பிரதான காரணமாக இருந்த சுழல்பந்துவீச்சாளரான மெஹிதி ஹஸன், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இதுவரை 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருப்பதோடு, ICC இன் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையிலும் 725 புள்ளிகளுடன் மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தினைப் பெற்றிருக்கின்றார்.

இதேநேரம், ICC இன் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் ட்ரென்ட் போல்ட் தொடர்ந்தும் 737 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணியின் மற்றுமொரு பந்துவீச்சாளரான முஷ்தபிசூர் ரஹ்மான் எட்டு இடங்கள் முன்னேறி தற்போது, ICC இன் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 652 புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மெஹிதி ஹஸன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதன் காரணமாக ICC இன் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முஜிபுர் ரஹ்மான் (708 புள்ளிகள்), நியூசிலாந்தின் மேட் ஹென்ரி (691 புள்ளிகள்), மற்றும் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா (690 புள்ளிகள்) ஆகியோர் முறையே மூன்றாம், நான்காம், ஜந்தாம் இடங்களுக்குப் பின்தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், தென்னாபிரிக்க அணியின் ககிஸோ றபாடா (666 புள்ளிகள்), இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் (665 புள்ளிகள்) மற்றும் அவுஸ்திரேலிய அணியினுடைய ஜோஸ் ஹேஸல்வூட் (660 புள்ளிகள்) ஆகியோர் முறையே ஆறாம், ஏழாம் மற்றும் எட்டாம் இடங்களில் காணப்பட, அவுஸ்திரேலிய அணியின் ஏனைய வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பேட் கம்மின்ஸ் 646 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றார்.

அதேநேரம், புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 597 புள்ளிகளுடன் 21ஆவது இடத்தில் காணப்படும் அகில தனன்ஞயவே இலங்கை அணி சார்பில், இந்த தரவரிசையில் சிறந்த பதிவை காட்டிய வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…