இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான நவீட் நவாஸ், பங்களாதேஷின் 19 வயதிற்கு உட்பட்ட தேசிய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும், இடதுகை துடுப்பாட்ட வீரரான நவாஸ் பங்களாதேஷின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதனை அந்த நாட்டின் கிரிக்கெட் சபை (BCB) இன்று (17) உறுதி செய்துள்ளது.
“நாங்கள் அவரை (நவாஸை) அடுத்த உலகக் கிண்ணம் வரை எமது தலைமை பயிற்றுவிப்பாளராக நியமித்திருக்கிறோம். குறிப்பிட்ட வயது எல்லையை சேர்ந்த வீரர்களுடன் பணிபுரிந்த அவரது பரந்த அனுபவம், எமது வீரர்களையும் நல்ல நிலைக்கு கொண்டு வர உதவும் என எதிர்பார்க்கின்றோம்“ என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவர் நவீட் நவாஸின் நியமனம் பற்றி அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.
இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் சிறந்த ஆரம்பத்தை வெளிக்காட்டிய இந்திய கனிஷ்ட அணி
44 வயதாகின்ற நவீட் நவாஸ் இலங்கையின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக 2009 ஆம் ஆண்டில் செயற்பட்டிருந்ததோடு, இலங்கை A கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை மகளிர் அணி ஆகியவற்றுடனும் இணைந்து பணிபுரிந்த அனுபவத்தை கொண்டிருக்கின்றார்.
அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில், அவுஸ்திரேலியாவின் டேமியன் வ்ரைட்டினால் பயிற்றுவிக்கப்பட்டிருந்த பங்களாதேஷ் அணி, குறிப்பிட்ட உலகக் கிண்ணத் தொடரில் ஆறாம் இடத்தைப் பெற்றிருந்தது. எனினும், புதிய பயிற்றுவிப்பாளர் மூலம் பங்களாதேஷின் இளையோர் அணி 2020 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள 19 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான அடுத்த கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இதனை விட சிறந்த பதிவைக் காட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எதிர்பார்க்கின்றது.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஒரு சில சர்வதேச போட்டிகளிலேயே நவீட் நவாஸ் விளையாடியிருக்கின்ற போதிலும் உள்ளூர் முதல்தர போட்டிகளில் அவரது பதிவு பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கின்றது. உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் 7,000 இற்கும் கிட்டவான ஓட்டங்களை குவித்திருக்கும் நவீட் நவாஸ் 12 சதங்களையும், 42 அரைச்சதங்களையும் விளாசியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க