இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான குழாத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இன்று (20) அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில், உபாதை காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து வெளியேறியிருந்த சகிப் அல் ஹசன் மீண்டும், அணியில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு
வேகப்பந்துவீச்சாளர்களுக்கான குழாத்தில் மொஹமட் சய்புதீன், முஷ்தபிசூர் ரஹ்மான் மற்றும் டஸ்கின் அஹமட் ஆகியோருக்கு அடுத்தப்படியாக, புதுமுக வேகப்பந்துவீச்சாளராக சொரிபுல் இஸ்லாம் இணைக்கப்பட்டுள்ளார். எனினும், ஹசன் மஹ்மூட் மற்றும் மொஸ்டாக் ஹுசைன் ஆகியோர் உபாதை காரணமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முதற்தர சுழல் பந்துவீச்சாளர்களாக மெஹிதி ஹாசன் மிராஷ் மற்றும் மெஹிதி ஹாசன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், சகீப் அல் ஹசனும் சுழல் பந்துவீச்சாளர்களாக செயற்படுவர்.
அதேநேரம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பிரகாசிக்க தவறியிருந்த நஜ்முல் ஹுசைன் சென்டோ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சௌமிய சர்கார் அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், அடுத்த இரண்டு போட்டிகள் 25 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. எவ்வாறாயினும், பங்களாதேஷ் அணி, முதல் இரண்டு போட்டிகளுக்கான குழாத்தை மாத்திரம் அறிவித்துள்ள நிலையில், மூன்றாவது போட்டிக்கான குழாத்தை அறிவிக்கவில்லை.
பங்களாதேஷ் குழாம்
தமிம் இக்பால் (தலைவர்), லிடன் டாஸ், சகிப் அல் ஹசன், முஷ்பிகூர் ரஹீம், மொஹமட் மிதுன், மொஹமதுல்லாஹ் ரியாத், அபிப் ஹுசைன், மெஹிதி ஹசான் மிராஷ், மொஹமட் சய்புதீன், டஸ்கின் அஹ்மட், முஷ்தபிசூர் ரஹ்மான், சௌமிய சர்கார், மொஷ்டாக் ஹுசைன் சய்கட், மெஹிதி ஹசான், சொரிபுல் இஸ்லாம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<