இலங்கை A அணியின் தொடரை தீர்மானிக்கும் போட்டிக்கு மழை தடங்கல்

1098
Image Courtesy - AP

இலங்கை மற்றும் பங்களாதேஷ் A அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் கடைசியுமான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமான முடிவு (No result) இன்றி முடிவுற்றது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் 1 – 1 என சமநிலையில் முடிவடைந்தது.

பங்களாதேஷின் சில்ஹட்டில் இன்று (22) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் ஆரம்பத்திலேயே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 45 ஓவர்களுக்கு வரையறுக்கப்பட்டதோடு, தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டியை கைவிட நடுவர்கள் முடிவெடுத்தனர்.

திசர பெரேராவின் அதிரடி சதத்தால் இலங்கை A அணிக்கு வெற்றி

இந்த போட்டியில் இலங்கை அணிக்காக விக்கெட் காப்பாளர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம துடுப்பாட்டத்தில் சோபித்ததோடு, A அணிக்கு தலைவராக செயற்பட்ட சகலதுறை வீரர் திசர பெரேரா மீண்டும் ஒருமுறை துடுப்பாட்டத்தில் சோபித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

திசர பெரேரா இந்த தொடரில் ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பெற்றதோடு அதிகபட்சம் மூன்று போட்டிகளிலும் மொத்தம் 177 ஓட்டங்களை குவித்தார்.

இந்நிலையில் தாமதித்து அரம்பமான மூன்றாவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை A அணித் தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த உபுல் தரங்க ஒரு ஓட்டத்தை பெற்று வெளியேறினார்.

இந்நிலையில் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரம மற்றும் அஷான் பிரியன்ஜன் 130 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டு இலங்கை அணிக்கு வலுச் சேர்த்தனர். இதில் சமரவிக்ரம 83 பந்துகளில் 10 பௌண்டரிகளுடன் 75 ஓட்டங்களை பெற்றதொடு, பிரியன்ஜன் 62 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றார்.

எனினும் இலங்கை அணி மேலும் இரண்டு ஓட்டங்களை பெறுவதற்குள் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் நெருக்கடியை சந்தித்தது. இதன்படி 134 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்த இலங்கை A அணி 136 ஓட்டங்களை பெறுவதற்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஷெஹான் ஜயசூரிய மற்றும் தசுன் ஷானக்க தலா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷம்மு அஷான் 15 ஓட்டங்களையே பெற்றார்.

இந்நிலையில் மத்திய பின் வரிசையில் களமிறங்கிய திசர பெரேரா பெறுப்புடன் ஆடி இலங்கையின் ஓட்டங்களை சவாலான இலக்கை நோக்கி அழைத்து வந்தார். 44 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 5 பௌண்டரிகளுடன் 44 ஓட்டங்களை பெற்றதோடு செஹான் மதுஷங்க பெற்ற 29 ஓட்டங்களும் இலங்கை அணிக்கு பயனுள்ளதாக இருந்தது.

இதன் மூலம் இலங்கை A அணி நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது. இதன் போது பங்களாதேஷ் A அணி சார்பில் வலதுகை சுழல் பந்து வீச்சாளர் சன்சமுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இளம் தனன்ஜயவின் அதிரடி மாற்றத்திற்கான காரணங்கள்

இந்நிலையில் டக்வர்த் லுவிஸ் முறையில் 45 ஓவர்களுக்கு 243 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களதேஷ் A அணி வெறுமனே 3.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 12 ஓட்டங்களை பெற்ற நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. போட்டியை தொடர முடியாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை A அணி முன்னதாக பங்களாதேஷ் A அணிக்கும் எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரை 1-0 என வெற்றிபெற்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை A – 240/9 (45) – சதீர சமரவிக்ரம 75, அஷான் பிரியன்ஜன் 53, திசர பெரேரா 44, ஷெஹான் மதுசங்க 29, சுன்சமுல் இஸ்லாம் 4/24, காலித் அஹமட் 2/42

பங்களாதேஷ் A – 12/0 (3.4)

முடிவு – முடிவில்லை

  • தொடர் நாயகன் – திசர பெரேரா        

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<