டாக்கா மரதனில் மலையகத்தின் வேலு கிரிஷாந்தினிக்கு 4ஆம் இடம்

Sheikh Mujibur Rahman Dhaka Marathon - 2022

393

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அழைப்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மலையக வீராங்கனை வேலு கிரிஷாந்தினி நான்காவது இடத்தைப் பெற்று ஆறுதல் அடைந்தார்.

அத்துடன், ஆண்கள் பிரிவில் பங்குகொண்ட மற்றுமொரு மலையக வீரரான முத்துசாமி சிவராஜன், 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பங்களாதேஷின் தேச பிதாவான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூறாவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் அந்நாட்டு மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அழைப்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டி நேற்று பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.

தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குகொண்ட இந்த மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து நான்கு வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் ஆண்கள் பிரிவில் பங்குகொண்ட சிவராஜன், போட்டியை 2 மணித்தியாலம் 29 நிமிடங்கள் 47 செக்கன்களில் நிறைவுசெய்து 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, அவருடன் போட்டியிட்ட மற்றுமொரு இலங்கை வீரரான திஸ்ஸ குணகேர, போட்டியை 2 மணித்தியாலம் 31 நிமிடங்கள் 32 செக்கன்களில் நிறைவுசெய்து 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, பெண்கள் பிரிவில் பங்குகொண்ட வேலு கிரிஷாந்தினி, போட்டியை 3 மணித்தியாலம் 01 நிமிடம் 16 செக்கன்களில் நிறைவுசெய்து 4 ஆவது இடத்தைப் பெற்று ஆறுதல் அடைந்தார்.

அத்துடன். அவருடன் போட்டியிட்ட மற்றுமொரு இலங்கை வீராங்கனையான வத்சலா ஹேரத் 5 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் 3 மணித்தியாலம் 10 நிமிடங்கள் 53 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இதேவேளை, ஆண்கள் பிரிவில் பங்குகொண்ட சிவராஜனும், பெண்கள் பிரிவில் பங்குகொண்ட கிரிஷாந்தினியும் மலையகத்தைச் சேர்ந்த வீரர்களாவர்.

இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மரதனில் தங்கப் பதக்கம் வென்ற சிவராஜன், நுவரெலியா ஒலிஃபன் தோட்டத்தை சேர்ந்தவராவார்.

அதேபோல, கிரிஷாந்தினி, நுவரெலியா ஓல்டிமார் தோட்டத்தைச் சேர்ந்தவராவார். இவர்கள் இருவரும் முறையே இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படையில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<