பங்களாதேஷை வீழ்த்தி சம்பியனாகிய இலங்கை கரப்பந்தாட்ட அணி

Bangabandhu Asian Central Zone Men's Volleyball Challenge Cup 2021

343

ஆசிய பங்கபந்து மத்திய வலய  ஆடவர் கரப்பந்தாட்ட கிண்ணத்தின் (Bangabandhu Asian Central Zone Men’s Volleyball Challenge Cup)  இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணியை 3-0 என வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது.

பங்களாதேஷில் நடைபெற்றுவந்த இந்த போட்டித்தொடரில் இலங்கை, பங்களாதேஷ், மாலைத்தீவுகள், நேபாளம், கிர்கிஸ்தான் மற்றும்  உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் பலப்பரீட்சை நடத்திவந்தன.

>>JVL இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ்

இதில் லீக் சுற்றில் மாலைத்தீவுகள், உஸ்பெகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்திய நிலையில், இன்றைய தினம் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணியை இலங்கை அணி எதிர்கொண்டது.

தொடரின் பலமான அணியென்ற ரீதியில் களமிறங்கிய இலங்கை ஆடவர் அணி, இறுதிப்போட்டியிலும் அபார திறமையை வெளிப்படுத்தியிருந்தது. ஆட்டத்தின் முதல் செட்டில், ஆரம்பத்திலிருந்து இலங்கை அணி முன்னிலை பிடித்துக்கொண்டது.

எனினும், பங்களாதேஷ் வீரர்கள் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்த இறுதி தருணத்தில் முதல் செட் விறுவிறுப்படைந்தது. இரண்டு அணிகளும் ஒரு கட்டத்தில் 23-23 புள்ளிகள் என சம பலத்தை காண்பித்தன. எவ்வாறாயினும், இறுதி தருணத்தில் இலங்கை வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த 28-26 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது.

பின்னர் ஆரம்பித்த இரண்டாவது செட்டில், இலங்கை அணி முதல் செட்டை போன்று ஆதிக்கம் காட்டியது. குறிப்பாக பங்களாதேஷ் அணி 3 புள்ளிகளை மாத்திரம் பெற்றிருக்க இலங்கை அணி 10 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. இருப்பினும், பங்களாதேஷ் அணி ஆட்டத்தை இலகுவாக எடுத்துக்கொள்ளாமல் சிறப்பாக ஆடியது. எவ்வாறாயினும், தங்களுடைய ஆரம்ப முன்னிலையை சிறப்பாக கொண்டிருந்த இலங்கை அணி 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றியது.

தொடர்ந்து போட்டியை தீர்மானிக்கக்கூடிய மூன்றாவது செட்டில், பங்களாதேஷ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்பத்திலிருந்து தங்களுடைய முன்னிலையை தொடர்ந்த பங்களாதேஷ் அணி, 16 புள்ளிகள் வரை முன்னிலையை தக்கவைத்திருந்தது. ஆனாலும், அதனைத்தொடர்ந்து தங்களுடைய திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி மிகச்சிறப்பாக ஆடி புள்ளிகளை குவித்தது. இறுதியாக செட்டை 25-20 என கைப்பற்றிய இலங்கை அணி 3-0 என போட்டியை வெற்றிக்கொண்டு, சம்பியனாக மகுடம் சூடியது.

இதேவேளை, பெண்களுக்கான மூன்றாவது இடத்துக்கான போட்டியில், கிர்கிஸ்தான் அணியை 3-0 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<