20 வயதின் கீழ் ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

238

பஹ்ரெய்னின் மனாமா நகரில் நடைபெற்று வருகின்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் முதல் சுற்றில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி, இரண்டாவது சுற்றில் கஸகஸ்தான் அணியுடன் தோல்வியைத் தழுவி காலிறுதியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை இரண்டாவது சுற்றுக்கு தகுதி

பஹ்ரைனின் மனாமா நகரில் நடைபெற்று வருகின்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கனிஷ்ட ஆசிய கரப்பந்தாட்டப்…….

முன்னதாக கடந்த 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெற்ற  முன்னோடி லீக் சுற்றில் கஸகஸ்தானையும், அவுஸ்திரேலியாவையும் தலா 3-1 என்ற செட்கள் அடிப்படையில் இலங்கை அணி வெற்றிகொண்டது.

அதன்பின்னர், நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மீண்டும் கஸகஸ்தான் அணியை எதிர்த்தாடிய இலங்கை அணி, துரதிஷ்டவசமாக 3-1 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதன்படி, சுப்பர் 8 சுற்றில் விளையாடும் வாhய்ப்பையும் இலங்கை இழந்தது.

எனினும், முன்னோடி சுற்று ஆட்டங்களில் இலங்கை அணியுடன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய கஸகஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய அணிகள், காலிறுதிச் சுற்றில் முறையே இலங்கை மற்றும் பஹ்ரெய்ன் ஆகிய அணிகளைத் தோல்வியடையச் செய்து காலிறுதிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டமை இங்கு மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆனால், போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் இடைநடுவில் மேற்கொண்ட போட்டி அட்டவணை மாற்றங்கள் காரணமாக இலங்கை அணிக்கு மீண்டும் கஸகஸ்தான் அணியுடன் போட்டியிட நேர்ந்ததாகவும், இதனால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் .எஸ் நாலக தெரிவித்தார்.

இதேநேரம், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பிரேமலால் கருத்து வெளியிடுகையில், எமது வீரர்கள் இந்தப் போட்டிக்கு சிறப்பாக தயாராகி இருந்தார்கள். எனினும், போட்டி அட்டவணையில் மேற்கொண்ட திடீர் மாற்றங்களினால் அவர்கள் மனதளவில் பின்னடைவை சந்தித்தனர். எமக்கு இதுதொடர்பில் அறிவிக்கவில்லை. ஆனால் எமது பெரும்பாலான வீரர்கள் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த போதிலும், எதிரணிக்கு பலத்த போட்டியைக் கொடுத்தனர் என தெரிவித்தார்.

இந்த நிலையில், கட்டார் அணியுடன் நேற்று (26) நடைபெற்ற குழுநிலை போட்டியில் 3-1 என்கிற செட்களில் (25-21, 21-25, 25-18, 26-24) இலங்கை அணி வெற்றி பெற்றது.

இதில் இலங்கை அணி சார்பாக ஜயலத் பண்டார 28 புள்ளிகளையும், குருகே பெரேரா 15 புள்ளிகளையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

அதற்கு முன்னர் கடந்த புதன்கிழமை (25) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் கஸகஸ்தான் அணிகள் மீண்டும் மோதின.

இலங்கை மற்றும் கஸகஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சுமார் ஒரு மணித்தியாலமும் 54 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் 24-26, 25-16, 13-25, 21-25 புள்ளிகளுடன் 3-1 என்ற செட் கணக்கில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.

ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்ட தொடருக்கான இலங்கை அணி பஹ்ரைன் பயணம்

இதன்படி, இலங்கை அணி நாளை (28)  9ஆவது மற்றும் 10ஆவது இடங்களுக்காக பஹ்ரெய்ன் அல்லது துர்க்மெனிஸ்தான் அணிகளில் ஒன்றை எதிர்த்து போட்டியிடவுள்ளது.

கடந்த 21ஆம் திகதி ஆரம்பமாகிய இம்முறை போட்டித் தொடரில் 24 ஆசிய நாடுகள் பங்குபற்றியிருந்தது. இதில் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை ஈரான், தாய்லாந்து, கொரியா மற்றும் ஈராக் ஆகிய அணிகள் பெற்றுக்கொண்டன. இதில் நடப்புச் சம்பியனான சீனா அணி, காலிறுதியில் ஈராக்கிடம் தோல்வியைத் தழுவ, தாய்லாந்து அணி 30 என்ற நேர் செட் கணக்கில் சீனா தாய்ப்பே அணியை வீழ்த்தி 28 வருடங்களுக்குப் பிறகு அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.