சாமர சில்வா மீதான தடை தற்காலிகமாக நீக்கம்

554

கிரிக்கெட் மகத்துவத்துக்கு கேடு விளைவித்த குற்றத்துக்காக இலங்கை அணியின் அனுபவமிக்க நட்சத்திர வீரர்களில் ஒருவரான சாமர சில்வாவிற்கு விதிக்கப்பட்டிருந்த 2 வருட போட்டித்தடை தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட உள்ளூர் முதல்தர அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில், பாணந்துறை மற்றும் களுத்துறை பௌதீக கலாச்சார கிரிக்கெட் கழகங்களுக்கிடையில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி மக்கொன – சர்ரே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறித்த கழகம், அதன் தலைவர்கள் மற்றும் வீரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி பாணந்துறை கிரிக்கெட் கழகத்தின் தலைவரும், இலங்கை அணியின் நட்சத்திர வீரருமான சாமர சில்வாவுக்கும், களுத்துறை கிரிக்கெட் கழகத்தின் தலைவர் மனோஜ் தேவப்பிரியவுக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் 2 வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வீரர்களுக்கு எதிர்வரும் 2 வருடங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கும், பயிற்சிகளைப் பெறுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம், கிரிக்கெட் சம்பந்தமான எந்தவொரு நிர்வாகச் செயற்பாடுகளிலும் பங்குபற்றமுடியாதென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியின் மூன்றாம் நாளன்று இடம்பெற்றதாக கூறப்படும் விளையாட்டுக்கு முரணான சில நிகழ்வுகள் தொடர்பாக இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்தது. இதனையடுத்து கடந்த 7 மாதங்களாக நடத்திய விசாரணைகளின் பின்னர் நிறைவேற்றுக் குழுவினால் கடந்த மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய குறித்த கழகங்களின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தடைக்குட்படுத்தப்பட்டதை எதிர்த்து குறித்த கழகங்களின் வீரர்களும், பயிற்றுவிப்பாளர்களும் மேன்முறையீடு செய்திருந்ததுடன், அதை விசாரணை செய்ய இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஒஷார பண்டிதரட்ன தலைமையிலான மேன்முறையீட்டு விசாரணைக் குழுவொன்றை கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்தது.

இது குறித்த விசாரணைகள் நிறைவடைய இன்னும் சில காலங்கள் தேவைப்படுவதால் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை பாணந்துறை கிரிக்கெட் கழகத்தின் தலைவர் சாமர சில்வாவுக்கும், களுத்துறை கிரிக்கெட் கழகத்தின் தலைவர் மனோஜ் தேவப்பிரியவுக்கும் எதிராக விதிக்கப்பட்ட போட்டித் தடையை மாத்திரம் தற்காலிகமாக நீக்குவதற்கு ஒஷார பண்டித்தரட்ன தலைமையிலான மேன்முறையீட்டு விசாரணைக்குழுவினால் இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று (30) அனுமதி அளித்தது.

அசார் அலியின் போராட்டத்தால் வலுவான நிலையில் பாகிஸ்தான்

எனவே இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாணந்துறை கிரிக்கெட் கழகத்தின் தலைவரும், இலங்கை அணியின் நட்சத்திர வீரருமான சாமர சில்வாவுக்கும், களுத்துறை கிரிக்கெட் கழகத்தின் தலைவர் மனோஜ் தேவப்பிரியவுக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்ட 2 வருடகால போட்டித் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மூவரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த விசாரணைகளை முழுமையாக ஆராய்வதற்கு சில காலங்கள் தேவைப்படுவதாக நிறைவேற்றுக் குழுவிடம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியுடன் விசாரணைகள் முடியும் வரை குறித்த வீரர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு மாத்திரம் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சாமர சில்வா உள்ளிட்ட வீரர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட போட்டித்தடை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சின் சார்பாக விசேட விசாரணையொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடந்தவாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.