கிரிக்கெட் போட்டியின் போது பந்தைச் சேதப்படுத்தும் குற்றத்தில் சிக்கும் வீரர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வீரர் ஒருவருக்கு, 6 டெஸ்ட் போட்டிகளில் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் (சர்வதேச போட்டிகள்) பங்கேற்பதற்குத் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
சந்திமாலின் மேன்முறையீடு நிராகரிப்பு; அணித்தலைவராக சுரங்க லக்மால்
பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றாச்சாட்டுக்கு எதிராக….
முன்னதாக, இவ்வாறான குற்றச்சாட்டை எதிர்நோக்கும் வீரருக்கு, ஒரு போட்டியில் பங்கேற்பதற்கே தடை விதிக்கப்பட்டு வந்தது. களத்தில் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்திய விவகாரங்கள் சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ஐ.சி.சி.) பெரும் தலைவலியாக உருவெடுத்தது. இந்நிலையிலேயே தண்டனை மேலும் அதிகமாக்கப்பட்டுள்ளதாக, ஐசிசி அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், பென்கிராப்ட் ஆகியோர் காகிதம் போன்ற பொருளைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியது அம்பலமானது. அவர்கள் மீது ஐ.சி.சி. மேற்கொண்ட நடவடிக்கை சாதாரணமாக இருந்தாலும், ஸ்டீவ் ஸ்மித், வோர்னர் ஆகியோருக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் செல்வதற்கு முன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் பந்தின் தன்மையை மாற்றிய சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து அவருக்கு ஒரு போட்டித் தடையும், போட்டி ஊதியத்தில் 100 சதவீத அபராதமும் விதிக்க ஐ.சி.சி நடவடிக்கை எடுத்தது.
எனினும், இலங்கை கிரிக்கெட் சபை, சந்திமால் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை எனத் தெரிவித்து அவருக்கு எதிராக எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றது.
சந்திமாலின் மேன்முறையீடு நிராகரிப்பு; அணித்தலைவராக சுரங்க லக்மால்
பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றாச்சாட்டுக்கு எதிராக….
இது இவ்வாறிருக்க, தென்னாபிரிக்க அணியின் தற்போதைய தலைவராக செயற்பட்டு வரும் டு ப்ளெசிஸ் 2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக ஹோர்பாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தினார்.
இதனையடுத்து அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஐ.சி.சியின் வீரர்களுக்கான ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 3 குறைமதிப்புப் புள்ளிகளும் வழங்கப்பட்டது.
இதேநேரம், 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக டுபாயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது தனது காற்சட்டையில் பந்தை தேய்த்தாக டு ப்ளெசிஸுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து பந்தை பரிசோதனை செய்த கள நடுவர்கள் பந்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, பாகிஸ்தான் அணிக்கு 5 மேலதிக ஓட்டங்களை உதிரிகளாக வழங்கினர்.
அத்துடன், டு ப்ளெசிஸுக்கு போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இவ்வாறான தொடர் சம்பவங்களை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்தை சேதப்படுத்துகின்ற விவகாரத்தில் நேரடியாக தொடர்புபடுகின்ற வீரர்களுக்கு அபராதத்துடன் ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாட தடை விதிப்பது போதாது, அதை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இது குறித்து அயர்லாந்தின் டப்ளின் நகரில் இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற ஐ.சி.சியின் 75ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன் முடிவில் பந்தின் தன்மையை மாற்றும் வீரருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்குவதற்கு ஐ.சி.சி. ஒப்புதல் வழங்கியது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கும் வீரர் மீது ஐ.சி.சி. நடத்தை விதி பிரிவு 2இன் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வந்தது. இனி அது பிரிவு 3இற்கு செல்கிறது.
முன்பு பிரிவு 3இன் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகும் வீரருக்கு 8 தகுதி இழப்பு புள்ளிகள் வழங்கப்படும். அது 12 தகுதி இழப்பு புள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பந்தின் தன்மையை மாற்றும் வீரர்களுக்கு 6 டெஸ்ட் போட்டிகள் வரையோ அல்லது 12 ஒரு நாள் போட்டிகள் வரையோ விளையாட தடை விதிக்கப்படும். இதேபோல், தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் வீரர் அதற்கு என்று தனியாக கட்டணம் செலுத்தும் முறையையும் ஐ.சி.சி. அறிமுகப்படுத்துகிறது. மேன்முறையீடு வெற்றிகரமாக அமைந்தால் செலுத்தப்படும் தொகை திரும்ப வழங்கப்படும்.
இதுதொடர்பில் ஐ.சி.சியின் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு அவைத் தலைவர் ஷஷாங் மனோகர் கருத்து வெளியிடுகையில், ”கிரிக்கெட்டில் ஒழுக்க விதிமுறையை இன்னும் கடுமையாக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக கிரிக்கெட் குழு மற்றும் தலைமை அதிகாரிகள் குழுவின் பரிந்துரையை ஏற்கிறோம். இதன்மூலம் ரசிகர்களின் நம்பிக்கை கிடைப்பதுடன், விளையாட்டின் உத்வேகமும் பாதுகாக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதேநேரம், தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகங்களுக்கும் தடை விதிப்பதற்கு ஐசிசி தீர்மானித்துள்ளதாக, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காக, தெளிவான சிந்தனையுடன் செயற்படத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரியாதையான ஒரு கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல், அணிகளின் வீரர்கள், ஒருவரை ஒருவர் மதித்து நடத்தல், அணிகளுக்கு இடையில் மரியாதையை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஐசிசி அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<