இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைவராக சகலதுறை வீரர் அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் T20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின் 18 ஆவது அத்தியாயம் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் நடப்புச் சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையல், இம்முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி மட்டும் அணித்தலைவரை அறிவிக்காமல் இருந்தது. கடந்த ஆணடு அந்த அணியின் தலைவராக இருந்த ரிஷப் பண்ட், ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட விக்கெட் காப்பாளரான லோகேஷ் ராகுல், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தலைவர் பதவி வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதன் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைவராக அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அந்த அணி நிர்வாகம் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் போதே அக்ஸர் படேல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவி தலைவராக செயல்பட்டு வந்தார். இதுதவிர்த்து அண்மையில் இந்திய T20i அணியின் உதவித் தலைவராகவும் அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- 2025 ஐபிஎல் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
- லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராகும் ரிஷப் பண்ட்?
கடந்த 7 ஆண்டுகளாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அக்ஸர், தனது சகலதுறை ஆட்டத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முதுகெலும்பாக மாறியுள்ளார். தலைவராக அனுபவம் இல்லாத போதிலும், டெல்லி அணி அக்ஸரை அணியின் தலைவராக நியமித்துள்ளது.
‘டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதை எண்ணி பெருமை கொள்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக நான் வளர்ந்துள்ளேன். மேலும், அணியை வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என நம்புகிறேன். அதற்கு நான் தயாராக உள்ளேன்’ என அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணி ஆறாவது இடத்தைப் பிடித்தது. இந்த நிலையில், அணித்தலைவர், பயிற்சியாளர் என நிறைய மாற்றங்களுடன் அந்த அணி இந்த முறை களம் காண்கிறது. இதனிடையே, எதிர்வரும் 24 ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியை டெல்லி எதிர்கொள்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 31 வயதான அக்ஸர் படேல், இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். 1653 ஓட்டங்கள் மற்றும் 123 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். பஞ்சாப் கிங்ஸ் (68 போட்டிகள்) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (82 போட்டிகள்) அணிகளுக்காக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளமை மற்றுமொறு சிறப்பம்சமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<