எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) சார்பாக, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) இலங்கையின் முன்னாள் வீரர்களான நுவான் சொய்ஸா மற்றும் அவிஷ்க குணவர்தன ஆகியோர் மீது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
முதன்முறையாக தனது சொந்த அணிக்கு திரும்பிய பொல்லார்ட்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர்களின் ஒருவரான…
இதில் நுவான் சொய்ஸா ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவின் நான்கு விதிமுறைகளை மீறியதன் அடிப்படையிலும், அவிஷ்க குணவர்தன இரண்டு விதிமுறைகளை மீறியதன் அடிப்படையிலும் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுகின்றனர்.
அதேநேரம், இந்த இரண்டு வீரர்களின் மீதான ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற T10 லீக் தொடருக்காகவே சுமத்தப்பட்டிருக்கின்றது.
எனினும், இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் இருவர் மீதும் T10 லீக்கில் எந்த சம்பவத்திற்காக ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது என்பது தொடர்பில் எந்த அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சொய்ஸா, கிரிக்கெட் பயிற்சியாளராக கடமையாற்றி வந்த தருணத்தில் ஐ.சி.சி. இன் ஊழல் தடுப்பு பிரிவின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதமும் கிரிக்கெட் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட தடையினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சொய்ஸா மீதான தடை இன்னும் அமுலில் இருக்கும் நிலையிலையே புதிய ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
சொய்ஸா மீது புதிய ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட அவர் மீறியதாக கூறப்படும் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவின் விதிமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
சரத்து 2.1.1 – ஏனைய தரப்பு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து முறையற்ற விதத்தில் போட்டி முடிவு ஒன்றையோ அல்லது அதன் ஏனைய அம்சம் ஒன்றையோ மாற்ற முயலுதல்.
சரத்து 2.1.4 – சரத்து 2.1.1 இணை மீறி நடக்கும் வகையில் போட்டியில் பங்கெடுப்பவர்களை (அதாவது வீரர்களை) நேரடியான முறையிலோ அல்லது நேரடியற்ற முறையிலோ ஊக்குவித்தல், அணுகுதல், அறிவுறுத்தல் விடுத்தல்.
சரத்து 2.4.4 – ஊழல் தொடர்பான விசாரணைகள் (ஐ.சி.சி. இன்) ஊழல் தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் தருணத்தில், அது தொடர்பான முழுமையான விடயங்களை வெளியிட தவறுதல்.
சரத்து 2.4.6 – (ஊழல் தொடர்பான) விசாரணைகள் ஊழல் தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் போது அதற்கான ஒத்துழைப்பு வழங்க தவறுதல் அல்லது மறுத்தல்.
இதேநேரம், இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க குணவர்தன ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களை முகம் கொடுக்க காரணமான ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவின் விதிமுறைகள் கீழ்வருகின்றன.
சரத்து 2.1.4 – சரத்து 2.1.1 இணை மீறி நடக்கும் வகையில் போட்டியில் பங்கெடுப்பவர்களை (அதாவது வீரர்களை) நேரடியான முறையிலோ அல்லது நேரடியற்ற முறையிலோ ஊக்குவித்தல், அணுகுதல், அறிவுறுத்தல் விடுத்தல்.
சரத்து 2.4.5 – (வீரர்) ஒருவர் தவறு ஒன்று செய்ததாக இனம்காட்டப்படும் சந்தர்ப்பத்தில் (தகுந்த காரணங்கள் இன்றி அப்படியான) ஏதாவது (ஊழல்) சம்பவமொன்றிற்கு, தேவையான முழு விபரங்களையும் வெளிப்படுத்த தவறுதல்.
>>த்ரில் வெற்றியுடன் சென்னையை சந்திக்கவுள்ள டெல்லி அணி<<
அவிஷ்க குணவர்தன, தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் தவறு இல்லை என நிரூபிக்கப்படும் வரையில் கிரிக்கெட் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஐ.சி.சி. இனால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நுவான் சொய்ஸா மற்றும் அவிஷ்க குணவர்தன ஆகிய இருவருக்கும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கம் அளிக்க இரண்டு வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரண்டு வீரர்களும் மே மாதம் 09ஆம் திகதியில் இருந்து அதனை அடுத்து வரும் 14 நாட்களுக்குள் தம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கம் தர வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாகியுள்ளனர்.
இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் முதல்தடவையாக ஹெட்ரிக் சாதனையினை பதிவு செய்த நுவான் சொய்ஸா, 40 டெஸ்ட் போட்டிகளிலும் 95 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியிருப்பதோடு, அவிஷ்க குணவர்தன 6 டெஸ்ட் போட்டிகளிலும், 61 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<