இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, பல மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் T20I தொடரின் பயிற்சிகளின் போது, அவிஷ்க பெர்னாண்டோ உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவிஷ்க பெர்னாண்டோ அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விளையாடியிருந்த நிலையில் முறையே 6 மற்றும் 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.
இவ்வாறான நிலையில் முழங்கால் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள அவிஷ்க பெர்னாண்டோ எதிர்வரும் 3 அல்லது 6 மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சத்திரசிகிச்சையொன்றையும் மேற்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவிஷ்க பெர்னாண்டோவின் உபாதையுடன் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது T20I போட்டியில் 5 வீரர்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நுவான் துஷார (உபாதை), பினுர பெர்னாண்டோ (உபாதை), ரமேஷ் மெண்டிஸ் (உபாதை) மற்றும் வனிந்து ஹஸரங்க (கொவிட்-19) ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான T20I போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளைய தினம் (20) இலங்கை நேரப்படி முற்பகல் 11.40 இற்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<