”உலகக் கிண்ணம் சிறந்த அனுபவத்தை கொடுத்துள்ளது” – அவிஷ்க

1113

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட நட்சத்திரமாக பிரகாசித்திருப்பவர் அவிஷ்க பெர்னாண்டோ. ஆரம்ப போட்டிகளில் விளையாடாவிட்டாலும், இறுதியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ஒட்டங்களை பெற்றிருந்தார். 

இந்திய அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ள இலங்கை!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களுடைய இறுதி லீக் போட்டியில்…

இலங்கை அணியின் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இருந்தாலும், இந்த தொடரில் மத்தியவரிசை வீரராக களமிறங்கி பிரகாசித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் அவிஷ்க. அதுமாத்திரமின்றி, இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள்  அணிக்கு எதிரான போட்டியில் சதம் கடந்த இவர், உலகக் கிண்ணத்தில் சதம் கடந்த மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றதுடன், இந்த உலகக் கிண்ணத்தில், இலங்கை அணிக்காக முதல் சதத்தை பெற்றுக்கொடுத்தவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

ஓட்டங்களை பெறுவதில் மாத்திரமின்றி, அவிஷ்க பெர்னண்டோ வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் விதமும் அனைவரையும் கவர்ந்திருந்தது. குறிப்பாக, சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக அவர் துடுப்பெடுத்தாடிய விதம், இலங்கை கிரிக்கெட்டின் துடுப்பாட்ட எதிர்காலம் அவிஷ்க என கிரிக்கெட் ஜாம்பவான்கள் பேசும் அளவிற்கு இருந்தது.

இவ்வாறு துடுப்பாட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அவிஷ்க பெர்னாண்டோ, இந்த உலகக் கிண்ணமானது அவருக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்திருப்பதாக எமது ThePapre.com இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். 

“எனக்கு மிகப்பெரிய அனுபவம் இது (உலகக் கிண்ணம்). சிறு வயதில் இவ்வாறான தொடரொன்றில் விளையாடி ஓட்டங்களை பெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுமாத்திரமின்றி எதிரணிகளில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக சிறப்பாக துடுப்பெடுத்தாட முடிகின்றது என்றால், எதிர்காலத்தில் என்னால் அணிக்கு நல்ல விடயங்களை செய்ய முடியும் என நினைக்கிறேன்”

>>Photos : CWC19 – Sri Lanka practice session ahead of India match<<

இலங்கை அணியானது உலகக் கிண்ணத்துக்கான அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. இவ்வாறான நிலையில், நாளைய தினம் இந்திய அணியை எதிர்கொள்கிறது. குறித்த போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, தங்களுடைய அடுத்த இலக்குகளை நோக்கி நம்பிக்கையுடன் செல்ல எதிர்பார்த்துள்ளது. இது குறித்தும் அவிஷ்க தருத்து தெரிவித்தார். 

“நாம் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளோம். எனினும், நாளைய போட்டிக்காக சிறந்த முறையில் ஆயத்தமாகியுள்ளோம். நாளைய போட்டியில் சாதகமான முடிவினை பெறவேண்டும் என்பதுடன், அதற்கு அடுத்தப்படியாக நடைபெறவுள்ள தொடர்கள் குறித்தும் அவதானம் செலுத்தி வருகின்றோம்” என அவிஷ்க பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இலங்கை அணி உலகக் கிண்ணத்தின் தங்களுடைய இறுதி லீக் போட்டியில் இந்திய அணியை நாளை (06) லீட்ஸ் – ஹெடிங்லேவ் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<