ஜிம்பாப்வே ஒருநாள் தொடரை தவறவிடும் அவிஷ்க பெர்னாண்டோ

Zimbabwe tour of Sri Lanka 2022

522

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இம்மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடரை அவர் தவறவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா ஜிம்பாப்வே இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 16,18 மற்றும் 21 ஆகிய திகதிகளில் கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஜிம்பாவே தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை அணி விபரம் நாளை (09) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதுடன், நாளை மறுதினம் (10) முதல் இலங்கை அணி வீரர்கள் அனைவரும் உயிர் பாதுகாப்பு குமிழிக்குள் இணையவுள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, ஜிம்பாவே தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை வீரர்களின் உடற்தகுதியை பரிசோதனை செய்யும் 2 கிலோ மீட்டர் தூர ஓட்டம் இன்று (08) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றதுடன், இதில் பங்குகொண்ட பெரும்பாலான வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இலங்கை அணியின் 18 உறுப்பினர்கள் மற்றும் 11 அதிகாரிகள் உட்பட மொத்தம் 29 பேருக்கு இன்றைய தினம் (08) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும், இன்று பிற்பகல் வரை பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வரவில்லை.

இருப்பினும், இந்த பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தொண்டையில் ஏற்பட்ட வலி காரணமாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவுக்கு உடனடியாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மற்றுமொரு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மறுபுறத்தில் அவிஷ்க பெர்னாண்டோ கடந்த ஒரு வார காலமாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மேலும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள அவிஷ்க பெர்னாண்டோ ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டு;;ள்ளது.

இதன்காரணமாக, சர்வதேச போட்டித்தடையிலிருந்து அண்மையில் விடுவிடுக்கப்பட்ட இளம் வீரர் குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோவுக்குப் பதிலாக இலங்கை அணியில் களமிறங்குவார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இலங்கையுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள ஜிம்பாப்வே அணி நாளை (10) அதிகாலை 2.00 மணியளவில் இலங்கையை வந்தடையவுள்ளது. இதன்போது விமான நிலையத்தில் ஜிம்பாப்வே வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அங்கிருந்து கண்டி செல்லும் ஜிம்பாப்வே வீரர்கள், மூன்று நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<