ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான அணிகள் உறுதி

5531
World Cup 2023 spots finalised after Ireland-Bangladesh washout

ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்காக செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழையினால் தடைப்பட்டதனை அடுத்து ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

>> தசுன் ஷானக அமெரிக்காவில் கிரிக்கெட் ஆட ஒப்பந்தம்

அதன்படி உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் விளையாடும் பத்தாவது அணியாக அயர்லாந்து கிரிக்கெட் அணி மாறியிருக்கின்றது.

2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் 07 அணிகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், எட்டாவது அணி தென்னாபிரிக்காவா, அயர்லாந்தா என்ற சந்தேகம் இருந்தது.

அதேபோன்று, எஞ்சிய இரண்டு அணிகளையும் தெரிவு செய்வதற்காக உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் ஜூன் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் ஜூலை 09ஆம் திகதி வரை ஜிம்பாப்வேயில் நடைபெறும்.

மொத்தம் 10 நாடுகள் விளையாடவிருக்கும் இந்த தகுதிகாண் தொடருக்கு ஐ.சி.சி. ஒருநாள் சுபர் லீக்கின் புள்ளிப்பட்டியலில் இறுதி 05 இடங்களைப் பெறும் அணிகள் தெரிவாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏற்கனவே ஐ.சி.சி. ஒருநாள் சுபர் லீக் மூலமாக இலங்கை, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தெரிவாகியிருந்தன.

எனினும் ஐ.சி.சி. ஒருநாள் சுபர் லீக்கில் பங்களாதேஷ் – அயர்லாந்து அணிகள் இடையிலான தொடர் நிறைவடையாததன் காரணமாக, தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளில் எந்த அணி உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடருக்கு செல்லும் என்பதில் சந்தேகம் நிலவிவந்தது. இதற்கு ஐ.சி.சி. ஒருநாள் சுபர் லீக் புள்ளிப்பட்டியலில் தென்னாபிரிக்கா 98 புள்ளிகளுடன் காணப்பட்டதும், தென்னாபிரிக்காவின் ஒருநாள் சுபர் லீக் புள்ளிகளை தாண்டுவதற்கான வாய்ப்பு அயர்லாந்து அணிக்கு பங்களாதேஷ் உடனான ஒருநாள் தொடர் மூலம் கிடைக்கவிருந்ததும் காரணமாகும்.

எனினும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை (10) கைவிடப்பட்ட நிலையில், அந்த போட்டியின் மூலம் அயர்லாந்திற்கு 5 புள்ளிகள் மாத்திரமே கிடைத்திருக்கின்றது. எனவே தற்போது அயர்லாந்து அணி தென்னாபிரிக்காவினை ஐ.சி.சி. ஒருநாள் சுபர் லீக் புள்ளிப் பட்டியலில் தாண்ட முடியாது. இதன் காரணமாகவே, உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் விளையாடும் 10ஆவது அணியாக அயர்லாந்து மாறுகின்றது.

எனவே, தென்னாபிரிக்க அணி ஐ.சி.சி. ஒருநாள் சுபர் லீக் மூலம் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெற்ற 8ஆவது அணியாக மாற, அதற்கு உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் விளையாடும் தேவையும் இல்லாமல் போகின்றது.

இனி நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் மூலம் இரண்டு அணிகள் 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவு செய்யப்படும்.

>> சூர்யகுமார், நெஹால் வதேரா அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி

2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 19ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறுகின்றது. ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<