இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நீந்தி மாற்றுத்திறனாளி சிறுமி சாதனை

196
Autism-affected girl swims from Sri Lanka to Dhanushkodi

இந்தியாவைச் சேர்ந்த ஒட்டிசம் குறைபாடு கொண்ட ஜியா ராய் என்ற 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியொருவர், இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனை வரையான 28.5 கிலோமீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் நீந்திக்கடந்து சாதனை படைத்தார்.

சிறுவயதிலிருந்தே ஜியா ராய் நீச்சல் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதையடுத்து ஜியா ராய்யின் தந்தையான மதன் ராய் தனது மகளுக்கு நீச்சல் மீது அதிக ஆர்வம் இருப்பதைக் கண்டு முறையாக பயிற்சி வழங்க முடிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி கொடுத்து வந்துள்ளனர்.

மும்பையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரியின் மகளான ஜியா ராய், இரண்டு வயதாக இருக்கும் போது ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நீச்சல் பயிற்சியை முன்னெடுத்து வந்தார்.

இந்த நிலையில், இலங்கை-இந்தியா ஆகிய இரு நாடுகளின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை தலைமன்னாரிலிருந்து 4.22 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்த ஜியா ராய், மாலை 5.32 மணிக்கு அரிச்சல் முனையை 13 மணி நேரத்தில் வந்தடைந்தார்.

இதுவரை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனை வரை மாற்றுத்திறனாளி எவருமே நீந்தி வராத நிலையில், முதல் முறையாக காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியான ஜியா ராய் 13 மணி நேரம் கடலில் நீந்தி வந்து சாதனை படைத்துள்ளார

எனவே, 13 வயதில் கடலில் நீந்தி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜியா ராயின் தந்தை மதன் ராய் கூறுகையில், “முதல் மூன்று மணி நேரம் அவருக்கு நீச்சல் கடினமாக இருந்தது. ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்த எனது மகள், நீந்தியதை பெரிய சாதனையாக கருதுகிறேன்” என்று கூறினார்.

கடந்த ஆண்டு, பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேட்வே ஆப் இந்தியா வரை 8 மணி நேரம் 40 நிமிடங்களில் நீந்தி ஜியா ராய் சாதனை படைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி, 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எலிபெண்டா தீவிலிருந்து இந்தியாவின் நுழைவாயில் வரையிலான 14 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 27 நிமிடங்களுக்குள் ஜியா ராய் நீந்தியிருந்தார்.

இதனிடையே, கடலில் நீச்சலடித்து சாதனை செய்த ஜியாவுக்கு இந்திய கடலோர பாதுகாப்புப் படை, இலங்கை கடற்படை, பொலிசார் கடலில் பாதுகாப்பு வழங்கியதோடு, சாதனை படைத்த அவருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<