பங்களாதேஷ்-அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு

127
(Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

எதிர்வரும் ஜூன் மாதம் பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் இடையில் நடைபெறவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

விஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த……

ஜூன் மாதம் பங்களாதேஷ் செல்லும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக விளையாடவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், ஒத்திவைக்கப்பட்டிருக்கும் விடயத்தினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) வியாழக்கிழமை (9) உறுதி செய்திருக்கின்றது.  

அதேநேரம் பங்களாதேஷ், அவுஸ்திரேலிய ஆகிய இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகள், ஒத்திவைக்கப்பட்டிருக்கும் இந்த டெஸ்ட் தொடரை நடாத்துவதற்கான திகதிகளை  பின்னர் அறிவிப்பதாக தெரிவித்திருக்கின்றன. 

இந்த டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் விடயம் தொடர்பில்  பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். 

”(இந்த டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது) இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் வீரர்களுக்கும், இரசிகர்களுக்கும் மிகவும் கவலையான விடயம் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆனால், இருக்கும் கொரோனா வைரஸ் பிரச்சினையைப் பார்க்கும் போது இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகள் ஒரு பொருத்தமான முடிவினையே எடுத்திருப்பதாக நம்புகின்றேன்.” என்றார். 

மறுமுனையில், இந்த டெஸ்ட்  தொடர் ஒத்திவைக்கப்பட்ட விடயம் தொடர்பில்  அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி கெவின் ரொபர்ட்ஸ் கருத்து வெளியிட்ட போது, வீரர்களின் பாதுகாப்பினை கருதி இந்த டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருப்பது சிறந்த விடயம் என்று தெரிவித்திருந்தார்.

பங்களாதேஷ் – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் மாதம் 11ஆம் திகதியும், இரண்டாவது போட்டி ஜூன் மாதம் 19ஆம் திகதியும் நடைபெறவிருந்தன. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னர் பங்களாதேஷ் வரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றில் விளையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கொரோனாவினால் தள்ளிப்போன ஆஸி. வீரர்களின் திருமணங்கள்

கொரோனா வைரஸ் கிரிக்கெட் போட்டிகளை…..

டெஸ்ட் போட்டிகளில் விளையாட கடைசியாக 2017ஆம் ஆண்டு பங்களாதேஷிற்கு வந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அப்போது பங்களாதேஷ் வீரர்களுடன் முதல் தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் தோல்வியினை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் மே மாதம் இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் விளையாடவிருந்த ஒருநாள், T20 போட்டிகள் கொண்ட தொடர்களும் கொரோனா வைரஸினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<