மாலைத்தீவிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பிய ஆஸி. வீரர்கள்!

Indian Premier League - 2021

199
Fox Cricket Twitter

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்ற ஆஸி. வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் அனைவரும் மாலைத்தீவிலிருந்து பாதுகாப்பாக இன்று அதிகாலை சிட்னியை சென்றடைந்ததாக அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த வருட IPL போட்டிகள் இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா, அஹமதாபாத், டெல்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் நடைபெற்றன

இந்த நிலையில், IPL கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென கொரோனா பாதுகாப்பு வளயத்தில் இருந்தும் சில வீரர்ளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து IPL தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.  

மாலைதீவுகளில் தனிமைப்படுத்தப்பட்ட மஹேல ஜயவர்தன

இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை அணி நிர்வாகங்களும், பிசிசிஐ முன்னெடுத்தன. தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் வீரர்கள் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்படவில்லை.

ஆனால், அவுஸ்திரேலியா தனது எல்லைகளை மூடி இந்தியாவில் இருந்து விமானங்கள் வருவதற்கு மே 15ஆம் திகதி வரை தடை விதித்தது. இதனால் அவுஸ்திரேலியா வீரர்கள் மாலைத்தீவு சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்ல முடிவு செய்தனர்

இதனையடுத்து, கடந்த 6ஆம் திகதி மாலைத்தீவு சென்ற அவர்கள் அங்குள்ள ஹோட்டல்களில் தங்கியிருந்தனர்

நேற்று முன்தினத்துடன் அவுஸ்திரேலியாவின் தடைக்காலம் முடிவுக்கு வந்தது. இதனால் அவுஸ்திரேலியாவுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன

IPL ஐ நடத்த முன்வந்துள்ள இலங்கை

இந்த நிலையில், IPL இல் விளையாடிய அவுஸ்திரேலிய வீரர்கள், வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள் என 38 பேர் மாலைதீவிலிருந்து இன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தனர்

பிசிசிஐ ஏற்பாடு செய்த தனி விமானத்தில் சிட்னியை சென்றடைந்த ஆஸி. குழுவினர் அனைவரும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு வீட்டிற்கு செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

டேவிட் வோர்னர், ஸ்மித், பட் கம்மின்ஸ் போன்ற கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் குழாத்தில் இருந்த ரிக்கி பொன்டிங் மற்றும் வர்ணனையாளர்கள் என 38 பேர் இந்த குழுவில் உள்ளடங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மைக் ஹஸிக்கு கொரோனா

இதேநேரம், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக்கல் ஹஸி இந்த குழாமில் சென்றடையவில்லை என்றும் தெரியவருகிறது. இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவரின் பயணம் மட்டும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அவுஸ்திரேலிய வீரர்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும்  அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்ததற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிக் ஹாக்லே பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 >>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<<