சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களின் அபாரத்தோடு தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலிய வீரர்களுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், ஒரு T20 போட்டி என்பவற்றில் விளையாடுகின்றது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று (4) பேர்த் நகரில் ஆரம்பமானது.
ஒரு நாள் தொடரை தக்கவைத்த இலங்கை இளையோர் அணி
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு பிளெசிஸ் அவுஸ்திரேலிய வீரர்களை முதலில் துடுப்பாடுமாறு பணித்தார். இதன்படி முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சரியாக முகம் கொடுக்க முடியாமல் 38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
அவுஸ்திரேலிய அணி இப்போட்டியில் பெற்ற மொத்த ஓட்டங்கள் 21 வருடங்களுக்கு பின்னர் அவர்கள் தமது சொந்த மண்ணில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் பெற்ற குறைவான மொத்த ஓட்ட எண்ணிக்கையாக மாறியிருந்தது.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் முன்வரிசை வீரர்கள் அனைவரும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 9ஆம் இலக்கத்தில் துடுப்பாடிய நேதன் கோல்டர் நைல் 5 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 31 பந்துகளுக்கு 34 ஓட்டங்கள் பெற்று அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்திருந்தார்.
மறுமுனையில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களில் அன்டைல் பெஹ்லுக்வேயோ 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், டேல் ஸ்டெய்ன், லுங்கி ன்கிடி மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கான 153 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குயின்டன் டி கொக், ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் நல்ல இணைப்பாட்டம் (96) ஒன்றினை வழங்கினர்.
இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு தென்னாபிரிக்க அணி போட்டியின் வெற்றி இலக்கினை 29.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களுடன் அடைந்தது.
தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த குயின்டன் டி கொக் 40 பந்துகளில் 7 பெளண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களை குவித்திருந்ததோடு, ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 44 ஓட்டங்களுடன் வெற்றிக்கான தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார். இதேநேரம், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பாக மார்க்கஸ் ஸ்டோனிஸ் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் பெற்றுக் கொண்டார்.
இப்போட்டியின் வெற்றியோடு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என முன்னிலை அடைந்துள்ளதோடு அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தினையும் வெற்றி ஒன்றுடன் ஆரம்பித்திருக்கின்றது.
தொடர்ச்சியாக 11ஆவது டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, இந்த ஒரு நாள் தொடரின் அடுத்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (9) எதிர்கொள்ளவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலியா – 152 (38.1) – நேதன் கோல்டர் நைல் 34, அலெக்ஸ் கேரி 33, அன்டைல் பெஹ்லுக்வேயோ 33/3, டேல் ஸ்டெய்ன் 18/2, லுங்கி ன்கிடி 26/2,
தென்னாபிரிக்கா – 153/4 (29.2) – குயின்டன் டி கொக் 47, ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 44, எய்டன் மார்க்ரம் 36, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 16/3
முடிவு – தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<