அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, பகலிரவு டெஸ்ட் போட்டியுடன், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நீண்ட தொடர், பிரிஸ்பேனில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் ஆரம்பிக்கவுள்ளதுடன், தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் என சுமார் 2 மாதம் போட்டிகள் நடைபெறவுள்ளன.
>> டோனி முறியடித்த சாதனையை சமப்படுத்திய தினேஷ் கார்த்திக்!
அடிலெய்டில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியானது, இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளதுடன், அந்த அணியின் 2வது பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் அமையவிருக்கிறது.
பகலிரவு டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-21ம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது போட்டி 26-30ம் திகதிகள் வரை மரபுரீதியான பொக்ஸிங் டே போட்டியாக நடைபெறவுள்ளது. பின்னர், மூன்றாவது போட்டி ஜனவரி 7-11ம் திகதிகளில் சிட்னியில் நடைபெறவுள்ளதுடன், இறுதி டெஸ்ட் போட்டி ஜனவரி 15-19ம் திகதிவரை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
இந்திய வீரர்கள் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகின்றனர். ஐ.பி.எல். தொடர் நவம்பர் 10ம் திகதி நிறைவடைந்த பின்னர், வீரர்கள் நேரடியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளனர். இந்தநிலையில், நவம்பர் 25-30ம் திகதிவரை ஒருநாள் போட்டிகளையும், T20 போட்டிகளை டிசம்பர் 4-8ம் திகதிவரை அட்டவனைப்படுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.
அதேநேரம், அவுஸ்திரேலிய செல்லும் இந்திய அணி, பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு முதல், தங்களுக்குள் ஒரு பகலிரவு டெஸ்ட் பயிற்சிப் போட்டியில் விளையாடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குயின்ஸ்லாந்து அரசாங்கம் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் மற்றும் அவுஸ்திரேலிய வீரர்களுக்கான தனிமைப்படுத்தல்கள் தொடர்பிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் கோரிக்கைகளுக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை.
>> Video – தடுமாற்றம் காணும் இலங்கை – பங்களாதேஷ் தொடர் |Sports RoundUp – Epi 134
தற்போதைய நிலையில் குயின்ஸ்லாந்து அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் விதிமுறையின் படி வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டும். தொடர் நவம்பர் 25ம் திகதி ஏற்பாடு செய்யப்படவிருக்கும் நிலையில், தனிமைப்படுத்தலின் போது, வீரர்கள் பயிற்சிகளை மாத்திரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விடயம் சற்று சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா அரசாங்கங்கள், வீரர்கள் வரும் தினத்திலிருந்து பயிற்சிகளை ஆரம்பிக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இந்த பகுதிகளில் உள்ள மைதானங்களை தெரிவுசெய்யும் கட்டாயத்துக்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியா முகங்கொடுத்துள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<