அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 146 ஓட்டங்களால் வெற்றி பெற்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரை இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் 1-1 என தொடரை சமப்படுத்தியுள்ளது.
ஆஸி. தொடரில் இருந்து இந்திய இளம் நட்சத்திரம் பிரித்வி ஷா விலகல்
அவுஸ்திரேலியாவுடனான முதல் இரு டெஸ்ட் ….
முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ஓட்டங்களால் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா அணி இப்போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் பலம் மிக்க இந்திய அணியை சந்தித்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மார்கஸ் ஹரிஸ் மற்றும் ஆரோன் பின்ஞ்ச் ஜோடி சிறப்பானதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்திருந்தனர். இருவரும் இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக 112 ஓட்டங்கள் பெற்றிருந்த போது பின்ஞ்ச் 50 ஓட்டங்களுடன் விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக வெளியேறினார். அடுத்து களமிறங்கிய உஸ்மான் கவாஜா வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதத்தை பெற்றிருந்த மார்கஸ் ஹரிஸ் 70 ஆட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
148 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த அவுஸ்திரேலியா அணிக்கு ஷோன் மார்ஷ் மற்றும் திரவிஸ் ஹெட் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்ட 84 ஓட்டங்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்த்தது. மார்ஷ் 45 ஓட்டங்களையும் ஹெட் 58 ஓட்டங்களுடன் முதல் நாளின் இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். முதலாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழந்து 277 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இரண்டாவது நாளில் தமது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா அணி 326 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் உபாதைக்குள்ளாகியிருந்த பின்ஞ்ச் துடுப்பெடுத்தாட களமிறங்கிய போதும், முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருந்தார். இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய இஷாந்த் ஷர்மா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன் ஏனைய பந்து வீச்சாளர்களான பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸ் இற்காக களமிறங்கிய இந்திய அணி 8 ஓட்டங்களுக்கு தமது முதல் இரு விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும்போது 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்கள் பெற்றிருந்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 82 ஓட்டங்களுடனும் அஜின்கிய ரஹானே 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஆஸி. தொடரில் இருந்து இந்திய இளம் நட்சத்திரம் பிரித்வி ஷா விலகல்
அவுஸ்திரேலியாவுடனான முதல் இரு டெஸ்ட் ….
மூன்றாம் நாளில் ரஹானே மேலதிகமாக ஓட்டமெதுவும் பெறாமல் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் சிறப்பாக விளையாடிய முதற்தர வீரரான இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது 25 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 25 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் கிரிகெட் ஜாம்பவான் பிரட்மனுக்கு அடுத்த படியாக தனது பெயரை சாதனை பட்டியலில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவர்களால் அவுஸ்திரேலியா அணியை விட 43 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 283 ஓட்டங்களையே பெற முடிந்தது. பந்து வீச்சில் நதன் லியொன் 5 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வூட் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
43 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸ் இற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 4 விக்கெட்டுகள் இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்தது. பின்னர் நேற்றைய (17) நான்காம் நாள் ஆட்டத்தில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா அணி மதிய போஷண இடைவேளை வரை அதே நான்கு விக்கெட்டுக்களுக்கு 192 ஓட்டங்கள் பெற்றிருந்தனர். அதன் பின்னர் இந்திய அணி பந்து வீச்சாளர்களின் மீள்வருகை அவுஸ்திரேலியா அணியை நிலைகுலையச் செய்தது. அந்த வகையில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான மொஹமட் ஷமி அவுஸ்திரேலியா அணியின் 6 விக்கட்டுக்களை பதம் பார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பும்ரா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
இறுதியில் அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களை பெற்று 287 ஓட்டங்களை இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது. விஷேசமாக அவுஸ்திரேலியா அணியின் கடைசி விக்கெட்டுக்காக ஸ்டார்க் மற்றும் ஹேசல்வூட் ஆகியோர் 36 ஓட்டங்களை இணைந்து பெற்றுக் கொடுத்திருந்தமை அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச் சேர்ந்திருந்தது.
வேகப் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த நான்காம் நாளில் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களை கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா அணியினரால் நிர்ணயிக்கப்பட்ட 287 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை அடைவதற்காக தமது இரண்டாவது இன்னிங்ஸ் இற்காக களமிறங்கிய இந்திய அணி ஸ்டார்க் வீசிய முதலாவது ஓவரிலே ஓட்டமெதுவும் பெறாத நிலையில் லோகேஷ் ராஹுலின் விக்கெட்டை பறிகொடுத்தது. தொடர்ந்து புஜாரா 4 ஓட்டங்கள் மற்றும் கோஹ்லி 17 ஓட்டங்கள் என குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இந்திய அணியினரால் வெற்றியிலக்கை அடைவதற்கான சாத்தியம் குறைவடைந்த நிலையில், அதாவது 5 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்கள் பெற்றிருந்த போது நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டாக்கின் டெஸ்ட் வாழ்க்கை கேள்விக்குறியில்..!
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து ….
வெற்றி பெறுவதாயின் இந்திய அணிக்கு மேலதிகமாக 175 ஓட்டங்களும் அவுஸ்திரேலியா அணிக்கு 5 விக்கெட்டுகளும் பெற வேண்டிய நிலையில் இன்றைய (18) இறுதி நாள் ஆட்டத்தில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி இன்றைய தினம் மேலதிகமாக 28 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 140 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சார்பாக ரஹானே மற்றும் ரிஷாஃப் பான்ட் ஆகியோர் தலா 30 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்ததே அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். பந்து வீச்சில் ஸ்டார்க் மற்றும் லியொன் ஆகியோர் மூன்று விக்கெட்டுகள் வீதமும் ஹேசல்வூட் மற்றும் கம்மிங்ஸ் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலியா அணி (முதல் இன்னிங்ஸ்) 326 – ஹரிஸ் 70, பின்ஞ்ச் 50, இஷாந்த் ஷர்மா 41/4, பும்ரா 53/2, விஹாரி 53/2
இந்தியா அணி (முதல் இன்னிங்ஸ்) 283 – கோஹ்லி 123, ரஹானே 51, லியொன் 67/5, ஹேசல்வூட் 66/2, ஸ்டார்க் 79/2
அவுஸ்திரேலியா (இரண்டாவது இன்னிங்ஸ்) 243 –
கவாஜா 72, பெய்னி 37, ஷமி 56/6, பும்ரா 39/3
இந்தியா (இரண்டாவது இன்னிங்ஸ்) 140 –
ரஹானே 30, பான்ட் 30, லியொன் 39/3, ஸ்டார்க் 46/3
முடிவு : அவுஸ்திரேலியா அணி 146 ஓட்டங்களால் வெற்றி
ஆட்ட நாயகன் : நதன் லியொன்