அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச தொடர் இன்று (12) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆரம்பமானது. இன்றைய முதலாவது போட்டியில் 34 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் பெற்றுள்ளது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த சர்வதேச டி20 தொடர் சமநிலையிலும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என வரலாற்று சாதனை வெற்றியையும் பதிவு செய்திருந்த நிலையில் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
விசாரணைகள் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து பாண்டியா, ராகுல் இடைநீக்கம்
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. அவுஸ்திரேலிய அணி சார்பாக இடது கை வேகப் பந்து வீச்சாளரான ஜேசன் பேரண்டோஃப் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுக வீரராக விளையாடியிருந்தார் என்பது சிறப்பம்சமாகும்.
டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றம் கண்ட அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் ஒருநாள் போட்டிகளிலும் தொடருமா என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக அணித்தலைவர் ஆரோன் பின்ஞ்ச் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்ஞ்சின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டை பதிவு செய்தார் இந்திய வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்.
8 ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை இழந்த அவுஸ்திரேலிய அணிக்கு தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களான உஸ்மான் கவாஜா, ஷோன் மார்ஷ் மற்றும் பீட்டர் ஹேன்ஸ்கோம்ப் ஆகியோரின் அரைச் சதங்கள் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்ட 47 ஓட்டங்கள் என்பன அவ்வணி டெஸ்ட் போட்டிகளில் கண்ட தடுமாற்றத்தை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருந்தது.
இறுதியில் அவுஸ்திரேலிய அணி தமது இன்னிங்சுக்காக 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் குலதீப் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களை தமது வேகத்தால் மிரட்டிய அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களான அறிமுக வீரர் பேரண்டோஃப் மற்றும் ஜேய் ரிச்சட்சன் ஆகியோர் இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் வெறும் நான்கு ஓட்டங்கள் மாத்திரமே பெற்றிருந்த போது கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் நான்காவது விக்கெட்டுக்காக ரோஹித் ஷர்மா மற்றும் மஹேந்திர சிங் டோனி ஆகியோர் 137 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை வலுப்படுத்தியிருந்தனர். டோனி 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, ஏனைய வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். எனினும் தனியாளாக போராடிய ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் தனது 22 ஆவது சதத்தை பூர்த்தி செய்து 133 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதுவரையில் கேள்விக் குறியாக இருந்த அவுஸ்திரேலிய அணியின் வெற்றி ஷர்மாவின் ஆட்டமிழப்பை தொடர்ந்து உறுதி செய்யப்பட்டது என்றால் மிகையாகாது.
இறுதியில் இந்திய அணியால் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. பந்து வீச்சில் ஜேய் ரிச்சட்சன் 10 ஓவர்களில் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அது தவிர அறிமுக வீரர் பேரண்டோஃப் மற்றும் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
உபாதை காரணமாக மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள ஸ்மித்
இந்திய அணியின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்த ஜேய் ரிச்சட்சன் இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். இந்திய அணி அடுத்த போட்டியை வென்று தொடரை தக்க வைக்குமா அல்லது அவுஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றுமா என்ற கேள்விகளுக்கான பதிலாக இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி அடிலெய்ட் நகரில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலிய – 288/5 (50) – ஹேன்ஸ்கோம்ப் 73, உஸ்மான் கவாஜா 59, ஷோன் மார்ஷ் 54, குலதீப் யாதவ் 54/2, புவனேஷ்வர் குமார் 66/2
இந்தியா – 254/9 (50) – ரோஹித் ஷர்மா 133, MS டோணி 51, ஜேய் ரிச்சட்சன் 26/4, பேரண்டோஃப் 39/2, ஸ்டொய்னிஸ் 66/2
முடிவு – அவுஸ்திரேலிய அணி 34 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<