நான்காவது தடவையாக மகளிர் T20I உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசம்

264

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் T20I உலகக் கிண்ணத்  தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி, அவுஸ்திரேலிய மகளிர் அணி நான்காவது முறையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.

அரையிறுதிப் போட்டிகளில், இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியையும், அவுஸ்திரேலிய அணியானது இந்திய மகளிர் அணியையும் வீழ்த்தியிருந்தது. இதன்படி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவுஸ்திரேலிய மகளிர் அணி, தங்களுடைய நான்காவது சம்பியன் கிண்ணத்தை நோக்கியும், இங்கிலாந்து அணி, இரண்டாவது சம்பியன் கிண்ணத்தையும் நோக்கியும் களமிறங்கின.

மகளிர் T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும்…

மேற்கிந்திய தீவுகளின் நோர்த் சௌண்ட் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை டேனியல்லே வையட் சிறந்த ஆரம்பத்தினை பெற்றுக்கொடுத்தார்.

இவர், 37 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். எனினும், இவரது துடுப்பாட்டத்தின் பின்னர் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கிய இங்கிலாந்து மகளிர் அணியானது 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அணித் தலைவி ஹேதர் நைட் 25 ஓட்டங்களை பெற, ஏனைய வீராங்கனைகள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சினை பொருத்தவரை, அஷ்லி கார்ட்னர் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஜோர்ஜியா வரஹேம் மற்றும் மெகன் ஸ்கவுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி, ஆரம்ப விக்கெட்டுக்காக 29 ஓட்டங்களை வேகமாக பகிர்ந்தது. இதில் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த அலிஸா ஹேலி, சோபியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான பெத் மூனியும் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிந்து வெளியேறினார்.

முதல் வெற்றியுடன் அரையிறுதிக்கான எதிர்பார்ப்பை நீடித்துள்ள இலங்கை மகளிர் அணி

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும்…

எனினும், அஷ்லி கார்ட்னருடன் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த, அணித் தலைவி மெக் லென்னிங் அவுஸ்திரேலிய மகளிர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாட, அவுஸ்திரேலிய அணி 15.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் அஷ்லி கார்ட்னர் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும், அணித் தலைவி மெக் லென்னிங் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் சோபியா எக்ஸெலஸ்டோன் மற்றும் டேனியல்லே ஹெஷல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதேவேளை, இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகியாக அஷ்லி கார்ட்னர் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் நாயகியாக அலிஸா ஹேலி தெரிவுசெய்யப்பட்டார்.

போட்டி சுருக்கம்

இங்கிலாந்து அணி – 105/10 (19.4), டேனியல்லே வையட் 43, ஹேதர் நைட் 25, அஷ்லி கார்ட்னர் 22/3

அவுஸ்திரேலிய அணி – 106/2 (15.1), அஷ்லி கார்ட்னர் 33*, மெக் லென்னிங் 28*, அலிஸா ஹேலி 22, சோபியா எக்ஸெலஸ்டோன் 12/1

முடிவுஅவுஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

  • ஆட்டநாயகிஅஷ்லி கார்ட்னர்
  • தொடர் ஆட்டநாயகிஅலிஸா ஹேலி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<