இவ்வருடத்தில் டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, தற்பொழுது இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 18 ஓட்டங்களால் அதிர்ச்சியடையும் விதத்தில் தோல்வியடைந்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி
மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு T-20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
அந்த வகையில் பாகிஸ்தான் அணி முதல் டெஸ்ட் போட்டியில் 39 ஓட்டங்களால் தோல்வியுற்ற நிலையில் தொடரை தக்கவைக்க வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் சிறப்பாக துடுப்பாடி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 443 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது. பாகிஸ்தான் அணி சார்பாக மிகவும் சிறப்பாக துடுப்பாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அசார் அலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, 20 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 364 பந்துகளுக்கு 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அவுஸ்திரேலிய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஜோஷ் ஹஸல்வூட் மற்றும் ஜாக்சன் பிரட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதே நேரம் முதலாம் நாள் மழை காரணமாக 50.5 ஓவர்களும் மூன்றாம் நாளில் 58 ஓவர்களும் மாத்திரமே வீசப்பட்டதிருந்தமை குறிப்ப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்சிற்காகக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி இதற்கு முன்னதாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் இன்னிங்சுக்காக பெற்றிருந்த கூடிய ஓட்டங்களான 604 என்ற ஓட்ட சாதனையை முறியடித்து, 142 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 624 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இப்போட்டியின் இறுதி நாள் மதிய போசனத்துக்கு சிறிய நேரதிற்கு முன்னதாக தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
அவ்வணி சார்பாக டேவிட் வோர்னர் 144 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 165 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். பந்து வீச்சில் சொஹைல் கான் மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
181 ஓட்டங்களால் பின்னிலை வகித்த நிலையில் மதிய போசனத்துக்காக வெறும் நான்கு ஓவர்கள் எஞ்சியிருந்த வேளை களமிறங்கிய பாகிஸ்தான் அணி, மதிய போசன இடைவேளைக்கு முன்னதகாவே சமி அஸ்லமின் விக்கெட்டை 1 ஓட்டத்துக்கு இழந்தது. மதிய போசன இடைவேளையின் பின்னர் ஆட்டம் ஆரம்பமான முதல் ஓவரில் பாபர் ஆஸம் 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக துடுப்பாடிய அசார் அலி, தேனீர் இடைவேளைக்கு பின்னர் 43 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மிச்சல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
விறுவிறுப்பான இறுதி நேரத்தில் ஆட்டம் நிறைவுற சில ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில், 22 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு எஞ்சிய அனைத்து விக்கெட்டுக்களையும் வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றது.
அதிரடியாக பந்து வீசிய ஸ்டார்க் ஓட்டங்குக்கு 4 விக்கெட்டுகளையும், நாதன் லயன் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவானார். இந்த வெற்றியின் மூலம், அவுஸ்திரேலிய அணி 2-௦ என்ற அடிப்படையில் தொடரை வெற்றி கொண்டுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி சிட்னி SCG சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – அசார் அலி 205(364), சொஹைல் கான் 65(65), ஹஸல்வூட் 50/3 பிரட் 113/3
அவுஸ்திரேலிய (முதல் இன்னிங்ஸ்) – ஸ்டீவன் ஸ்மித் 165 (546), டேவிட் வோர்னர் 144(143), சொஹயில் கான் 131/3 யாசிர் ஷா 207/3
பாகிஸ்தான் (இரண்டாவது இன்னிங்ஸ்) – சர்ப்ராஸ் அஹமட் 43(62) அசார் அலி 43(112)