சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டவாறு நடைபெறும் என இரண்டு கிரிக்கெட் சபைகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் காரணமாக அவுஸ்திரேலிய அணி இலங்கை வருமா? இல்லையா? என்பது தொடர்பில் அதிகமான கேள்விகள் கடந்த வாரங்களில் எழுந்திருந்தன.
>> இலங்கை வரும் அவுஸ்திரேலிய அணி ; போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், போட்டிகள் திட்டமிட்டவாறு நடைபெறும் எனவும் பகலிரவு போட்டிகளும் திட்டமிட்ட நேரங்களில் நடைபெறும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20i, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் சுமார் ஒரு மாத காலம் நடைபெறவுள்ளதுடன், ஜூலை 12ம் திகதி தொடர் நிறைவுக்கு வரவுள்ளது.
இந்த தொடர் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பேச்சாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், “நாம் இரண்டு நாட்டு அரசாங்கங்களுடனும் தொடர்ச்சியாக தொடர்புக்கொண்டு வருகின்றோம். இலங்கை தொடருக்கான திட்டத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை.
அவுஸ்திரேலியா T20i அணி நாளை இலங்கைக்கு புறப்படவுள்ளது. உலகக்கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில், மூன்று T20i போட்டிகளும் எமக்கு முக்கியமானது என்பதுடன் வீரர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இலங்கை அணி மீது எமது குழாத்துக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அவர்கள் கடுமையாக போராடக்கூடியவர்கள். எனவே இந்த தொடரானது உற்சாகமானதாக அமையும் என நம்புகிறோம்” என்றார்.
இதேவேளை, அவுஸ்திரேலிய தொடரையடுத்து இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணம் தொடர்பிலான இறுதி முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. அவுஸ்திரேலிய தொடர் நடைபெறும் விதத்தை தொடர்ந்து ஆசியக்கிண்ணம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஆசிய கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<