இலங்கை – ஆஸி. தொடருக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது எப்படி?

Australia tour of Sri Lanka 2022

389

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள தொடருக்கான டிக்கெட்டுகளை எவ்வாறு கொள்வனவு செய்வது என்பது தொடர்பிலான அறிவித்தலை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை எதிர்வரும் 4ம் திகதி காலை 09.30 மணி முதல் www.srilankacricket.lk  இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

>> அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை T20I குழாம் அறிவிப்பு

அதேநேரம் இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகம் (ஜூன் 4ம் திகதி முதல்), கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம் (ஜூன் 8ம் திகதி முதல்) மற்றும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் (ஜூன் 26ம் திகதி முதல்) போன்றவற்றில் நேரடியாக டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய முடியும்.

இதில் இணையத்தளம் மூலமாக பதிவுசெய்யப்படும் டிக்கெட்டுகளை போட்டி தினத்தில் மேற்குறித்த டிக்கெட் விற்பனை செய்யும் மையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளதுடன், நேரடியாக கொள்வனவு செய்யப்படும் டிக்கெட்டுகள் போட்டி தினத்துக்கு முந்தைய நாட்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், போட்டி தினத்தில் மைதானங்களில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட மாட்டாது என இலங்கை கிரிக்கெட் சபை மேலும் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்துக்கான டிக்கெட்டுகள் 300 ரூபா முதல் 1500, 2500, 4000 மற்றும் 5000 ரூவாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், கண்டி பல்லேகலை மைதானத்தின் டிக்கெட்டுகள் 300 ரூபா முதல் 2000, 4000, 5000 மற்றும் 6500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள காலி சர்வதேச மைதானத்துக்கான டிக்கெட்டுகள் 300 ரூபா முதல் 500, 1000, 5000 மற்றும் 7500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணியானது 3 T20I, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதுடன், T20I தொடர் எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப்போட்டித்தொடரை பொருத்தவரை மைதானத்துக்கு 100 சதவீத ரசிகர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<