முதல் ஒருநாள் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

Australia Tour of Sri Lanka 2022

392

இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் போட்டிக்கான இறுதிப் பதினொருவர் அணியை அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் இன்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து உறுதி செய்தார்.

இலங்கை அணிக்கெதிராக நடைபெற்ற T20i தொடரில் இடம்பெறாத மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகிய மூவரும் அவுஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் கேரி, இலங்கை A அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய A அணிக்காக விளையாடியிருந்தார்.

இதனிடையே, முதலாவது T20i போட்டியின் போது விரல் காயத்தால் பாதிக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க், மூன்றாவது ஒருநாள் போட்டி வரை விளையாட முடியாது என்பதை ஆரோன் பிஞ்ச் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில் கேன் ரிச்சர்ட்சன் தொடை காயம் காரணமாக நாடு திரும்பியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ஸ்கொட் போலண்ட் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனிடையே, கொழும்பில் நடைபெறவுள்ள 3ஆவது ஒருநாள் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் உடற்தகுதியுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கெமரூன் கிரீன் முதல் இரண்டு போட்டிகளில் பந்துவீசமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, முதலாவது ஒருநாள் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் 4 துடுப்பாட்ட வீரர்கள் 3 சகலதுறை வீரர்கள் மற்றும் 3 வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழல் பந்துவீச்சாளர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதுடன், மூன்றாமிலக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் பெயரிடப்பட்டுள்ளார்.

மார்னஸ் லபுஷேன் நான்காமிலக்க துடுப்பாட்ட வீரராகவும், மார்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல் முறையே 5ஆம் மற்றும் 6ஆம் இலக்க வீரர்களாகவும், அலெக்ஸ் கேரி விக்கெட் காப்பாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சுழல் பந்துவீச்சாளராக அஸ்டன் ஏகார் செயல்படவுள்ளதுடன், வேகப் பந்துவீச்சாளர்களாக பெட் கம்மின்ஸ், ஜே றிச்சர்ட்சன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (14) கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி:

ஆரோன் பிஞ்ச் (தலைவர்), டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி (விக்கெட் காப்பாளர்), மார்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், அஸ்டன் ஏகார், பெட் கம்மின்ஸ், ஜே றிச்சர்ட்சன், ஜோஷ் ஹேசில்வுட்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<