தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 97 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்று எதிரணியின் சொந்த மண்ணில் வைத்து தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றிக்காக அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் துடுப்பாட்டத்தில் அசத்த, பந்துவீச்சில் அஸ்டன் அகார், அடம் ஸம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அசத்தியிருந்தனர்.
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின், தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான டி20 சர்வதேச போட்டி நேற்று (26) கேப்டவுணில் நடைபெற்றது. இன்றைய போட்டிக்கு தென்னாபிரிக்க அணியிலிருந்து ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப்பின் தென்னாபிரிக்க ஒருநாள் குழாமில் இடம்பிடித்த கேஷவ் மஹராஜ்
சுற்றுலா அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச…
துடுப்பாட்ட வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் இற்கு பதிலாக ஹென்ரிச் கிளாஸன் அணியில் இணைக்கப்பட்டிருந்தார். போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு மிகச்சிறந்த ஆரம்பம் கிடைத்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ஆரேன் பிஞ்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த அவுஸ்திரேலிய அணி முதல் பவர்பிளே 6 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 75 ஓட்டங்களை குவித்தது. ஆரம்பம் தொடக்கம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் ஆரேன் பிஞ்ச் 27 பந்துகளில் அரைச்சதம் கடந்தார்.
பின்னர் அதே ஓவரில் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் அதிரடியாக 30 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். இவ்வாறு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் அரைச்சதம் கடந்து அதிரடியாக துடுப்பெடுத்தாட 53 பந்துகளில் சத இணைப்பாட்டம் பெறப்பட்டது. முதல் 10 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 114 ஓட்டங்கள் குவித்தது.
இந்நிலையில் டி20 சர்வதேச அரங்கில் 17ஆவது அரைச்சத்தை பூர்த்தி செய்த டேவிட் வோர்னர் 37 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகள் உள்ளடங்களாக 57 ஓட்டங்களை குவித்து 12ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். வோர்னரை தொடர்ந்து மறுமுனையில் 12ஆவது அரைச்சத்தை பூர்த்தி செய்த அணித்தலைவர் ஆரேன் பிஞ்ச் அடுத்த ஓவரில் 37 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பௌண்டரிகள் உள்ளடங்களாக 55 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த மெத்யூ வேட் 16ஆவது ஓவரில் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் 17ஆவது ஓவரில் மிட்செல் மார்ஸ் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதனை தொடர்ந்து 19ஆவது ஓவரில் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கெரி 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக 20 ஓட்டங்களை விளாச அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களை குவித்தது.
ஆடுகளத்தில் ஸ்டீவ் ஸ்மித் 15 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 30 ஓட்டங்களையும், அஸ்டன் அகார் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் தப்ரிஸ் ஷம்ஷி, லுங்கி ங்கிடி, ககிஸோ ரபாடா, டுவைன் பிரிடோரியஸ் மற்றும் அண்ரிச் நோட்ரியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
தொடர்ந்து 194 என்ற கடின வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட் முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே வீழ்த்தப்பட்டது. கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதுவென்ற அணித்தலைவர் குயின்டன் டி கொக் வெறும் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் தொடர்ந்து 3ஆவது ஓவரில் அடுத்த விக்கெட் வீழ்த்தப்பட்டது. பாப் டு ப்ளெஸிஸ் வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தென்னாபிரிக்க அணி முதல் பவர்பிளே 6 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 50 ஓட்டங்களை குவித்தது. இந்நிலையில் 8ஆவது ஓவரில் ஹென்ரிச் கிளாஸன் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து அடுத்த ஓவரில் ரைஸ் வென் டர் டைஸன் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வேகத்திலேயே பைட் வென் பில்ஜோன் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி 10 ஓவர்கள் நிறைவில் 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
அபார வெற்றியுடன் ஒருநாள் தொடரை வென்றது இலங்கை
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குசல் மெண்டிஸ் மற்றும்…
தொடர்ந்து 13ஆவது ஓவரில் டேவிட் மில்லர் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மில்லரை தொடர்ந்து அடுத்த ஓவரில் டுவைன் பிரிடோரியஸ் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார். அண்ரிச் நோட்ரியா மற்றும் லுங்கி ங்கிடி அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து சென்றனர்.
இறுதியில் ககிஸோ ரபாடா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி 96 ஓட்டங்களில் சுருண்டு போனது. இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 97 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற அடிப்படையில் தனதாக்கியுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனான பந்துவீச்சில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் தெரிவானதுடன், தொடர் நாயகனாக துடுப்பாட்டத்தில் அசத்திய அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் தெரிவானார்.
தென்னாபிரிக்க அணி இதற்கு முன்னர் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியுடன் டி20 சர்வதேச தொடரை 2-1 என்ற அடிப்படையில் இழந்து, தற்போது அதே போன்று அவுஸ்திரேலிய அணியிடமும் 2-1 என்ற அடிப்படையில் தொடரை இழந்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்.
அவுஸ்திரேலியா – 193/5 (20) டேவிட் வோர்னர் 57 (37), ஆரேன் பிஞ்ச் 55 (37), ஸ்டீவ் ஸ்மித் 30 (15), தப்ரிஸ் ஷம்ஷி 1/25 (4), லுங்கி ங்கிடி 1/33 (4)
தென்னாபிரிக்கா – 96/10 (15.3) ரைஸ் வென் டர் டைஸன் 24 (19), ஹென்ரிச் கிளாஸன் 22 (18), அஸ்டன் அகார் 3/16 (4), மிட்செல் ஸ்டார்க் 3/22 (2.3), அடம் ஸம்பா 2/10 (3)
முடிவு – அவுஸ்திரேலிய அணி 97 ஓட்டங்களினால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<