ஸ்மித்தின் சதம் வீணாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா

170
Photos - BCCI

அவுஸ்திரேலிய அணியுடனான தீர்மானமிக்க மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ரோஹித் சர்மாவின் சதத்துடன் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்ற விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் தன்வசப்படுத்தியுள்ளது. 

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று (19) பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆரோன் பிஞ்ச் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். 

லோக்கேஷ் ராகுலின் அதிரடியோடு அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

ராஜ்கோட்டில் நேற்று (17) நடைபெற்று முடிந்திருக்கும்…..

கடந்த போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் ஜொஸ் ஹெஸில்வூட் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். இந்திய அணியில் மாற்றமெதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 

அவுஸ்திரேலிய அணிக்கு இன்றைய போட்டியில் சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. டேவிட் வோர்னர் 4ஆவது ஓவரில் வெறும் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து 9ஆவது ஓவரில் அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் எதிர்பாராத முறையில் 19 ஓட்டங்களுடன் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 

இந்நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்காக முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகியோர் இணைந்தனர். இருவரும் இணைப்பாட்டமாக சதம் கடக்க அவுஸ்திரேலிய அணி தடுமாற்றத்திலிருந்து மீண்டது. ஒருநாள் சர்வதேச அரங்கில் கன்னி அரைச்சதம் கடந்த மார்னஸ் லபுஷேன் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டம் 127 ஓட்டங்களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் ஐந்தாமிலக்க துடுப்பாட்ட வீரராக என்றுமில்லாதவாறு வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் களமிறங்கினார். ஆனால் அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை. வெறும் 3 பந்துகளுக்கு மாத்திரம் நிலைத்துநின்ற ஸ்டார்க் ஓட்டமெதுவும் இன்றி அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் காப்பாளர் அலக்ஸ் கேரி, ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைப்பாட்டத்தை ஆரம்பித்தார். 

பாகிஸ்தானை எதிர்கொள்ளும் பங்களாதேஷ் டி20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவுள்ள பாகிஸ்தான்…..

இருவரும் ஐந்தாவது விக்கெட் இணைப்பாட்டமாக 58 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் அலக்ஸ் கேரி 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஆடுகளம் நுழைந்த சகலதுறை வீரர் ஆஷ்டன் டேர்னர் 4 ஓட்டங்களுடன் அரங்கம் திரும்ப அவுஸ்திரேலிய அணி மீண்டும் தடுமாறியது. 

இந்நிலையில் கடந்த போட்டியில் 2 ஓட்டங்களினால் சதத்தை தவறவிட்டு, இன்றைய போட்டியிலும் ஆரம்பத்திலிருந்து சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது 9ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். 1 சிக்ஸர், 14 பௌண்டரிகளை பெற்ற ஸ்மித் 131 ஓட்டங்களை பெற்று 48ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 

அதனை தொடர்ந்துவந்த பெட் கம்மிண்ஸ் வந்த வேகத்திலேயே ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் இறுதி ஓவரில் அடம் ஸம்பா 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் ஆஷ்டன் அகார் 11 ஓட்டங்களுடனும், ஜொஸ் ஹெஸில்வூட் 1 ஓட்டத்துடனும் காணப்பட்டனர். 

இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் ஷமி 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ரவீந்திர ஜடேஜா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் மற்றும் நவ்தீப் ஷைனி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 287 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைத்தது. 

பங்களாதேஷை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் டி20 குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள……

ரோஹித் சர்மா – கே.எல் ராகுல் ஜோடி ஆரம்ப விக்கெட்டுக்காக 69 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் கே.எல் ராகுல் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவுடன் இணைந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி ஜோடி இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து சென்றது. 

ஒரு பக்கம் ரோஹித் சர்மா ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது 29ஆவது சதத்தை பூர்த்தி செய்ய மறுமுனையில் விராட் கோஹ்லி அரைச்சதம் கடந்தார். இருவரும் இணைப்பட்டமாக 137 ஓட்டங்களை பகிர்ந்து கொள்ள இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. ரோஹித் சர்மா 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகளுடன் 119 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். 

அதனை தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்காக அணித்தலைவர் விராட் கோஹ்லியுடன் ஷிரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைப்பாட்டமாக 68 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட வேளையில் அணித்தலைவர் விராட் கோஹ்லி ஒருநாள் அரங்கில் தனது 57ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து 8 பௌண்டரிகளுடன் 89 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். 

மறுமுனையில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஷிரேயஸ் ஐயர் ஆட்டமிக்காது 44 ஓட்டங்களையும், மணீஷ் பாண்டே ஆட்டமிழக்காது 8 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள இந்திய அணி 15 பந்துகள் மீதமுள்ள நிலையில் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஆஷ்டன் அகார், அடம் ஸம்பா மற்றும் ஜொஸ் ஹெஸில்வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி

தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள்…..

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டிகளை வெற்றிகொண்ட விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியானது தொடரை 2-1 என்ற அடிப்படையில் சொந்த மண்ணில் வைத்து கைப்பற்றியது. போட்டியின் ஆட்ட நாயகனாக சதம் விளாசிய ரோஹித் சர்மா தெரிவானதுடன், தொடர் ஆட்ட நாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா – 286/9 (50) – ஸ்டீவ் ஸ்மித் 131 (132), மார்னஸ் லபுஷேன் 54 (64), மொஹமட் ஷமி 4/63 (10), ரவீந்திர ஜடேஜா 2/44 (10)

இந்தியா – 289/3 (47.3) – ரோஹிட் சர்மா 119 (128), விராட் கோஹ்லி 89 (91), ஷிரேயஸ் ஐயர் 44 (35), ஆஷ்டன் அகார் 1/38 (10)

முடிவு – இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<