அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1998ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு T20I போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.
>>ஸ்கொட்லாந்தை வீழ்த்தி அரையிறுதியில் ஆஸி.யுடன் மோதவுள்ள பாகிஸ்தான்
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில், எதிர்வரும் மார்ச் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியிலும், மூன்றாவது போட்டி லாஹூரிலும் நடைபெறவுள்ளது. அடுத்துவரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள், மார்ச் 29 முதல் ஏப்ரல் 5ம் திகதிவரை லாஹூரில் நடைபெறவுள்ளன.
இதில், மூன்று டெஸ்ட் போட்டிகளும், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதுடன், ஒருநாள் போட்டிகள் ஐசிசி சுபர் லீக்கிற்கான போட்டிகளாக அமையவுள்ளன.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது. குறிப்பாக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்திருந்தன.
நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் சென்றிருந்த போதும், போட்டி தினத்தில் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக, தொடரை கைவிட்டு நாடு திரும்பியது. இந்த தொடர் நிறுத்தப்பட்டமையால், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும், பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என சுட்டிக்காட்டியிருந்தது. இவ்வாறான நிலையில், அவுஸ்திரேலியா அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
அவுஸ்திரேலியா அணி இறுதியாக 1998ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததுடன், அதன்பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
திகதி | போட்டி | மைதானம் |
மார்ச் 3-7 | முதல் டெஸ்ட் | கராச்சி |
மார்ச் 12-16 | 2வது டெஸ்ட் | ராவல்பிண்டி |
மார்ச் 21-25 | 3வது டெஸ்ட் | லாஹூர் |
மார்ச் 29 | முதல் ஒருநாள் | லாஹூர் |
மார்ச் 31 | 2வது ஒருநாள் | லாஹூர் |
ஏப்ரல் 2 | 3வது ஒருநாள் | லாஹூர் |
ஏப்ரல் 5 | T20I போட்டி | லாஹூர் |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<