பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஐந்தாவதும், இறுதியுமான T20I போட்டியில், அவுஸ்திரேலிய அணி, T20I கிரிக்கெட்டில் தங்களுடைய குறைந்த ஓட்ட எண்ணிக்கை பதிவுசெய்ததுடன், 4-1 என தொடரையும் இழந்தது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தங்களுடைய முதல் இருதரப்பு தொடர் வெற்றியை பதிவுசெய்தது.
ஆப்கானிஸ்தான் அணியுடன் இணையும் ஷோன் டைட்
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 4வது T20I போட்டியில், அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. எனினும், இன்று நடைபெற்றுமுடிந்த இறுதி T20I போட்டியில், 123 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 62 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, T20I கிரிக்கெட்டில் தங்களுடைய குறைந்த ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்தது.
இதற்கு முன்னர், 2005ம் ஆண்டு சௌதெம்டனில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I போட்டியில், அவுஸ்திரேலிய அணி 79 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதுவே, அவர்களுடைய குறைந்த T20I ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது. இவ்வாறான நிலையில், இன்றைய தினம், அவுஸ்திரேலிய அணி தங்களுடைய குறைந்த T20I ஓட்ட எண்ணிக்கையை பெற்று, மோசமான துடுப்பாட்ட வெளிப்படுத்தலை பதிவுசெய்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணிசார்பாக நயீம் 23 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, அவுஸ்திரேலிய அணிசார்பாக நேதன் எல்லிஸ் மற்றும் டேனியல் கிரிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, இந்த போட்டியிலும் துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது. அணித்தலைவர் மெதிவ் வேட் அதிகபட்சமாக 22 ஓட்டங்களையும், பென் மெக்டோமட் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எவரும், இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை.
இதனால், 13.4 ஓவர்கள் நிறைவில் 62 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து மோசமான தோல்வியை சந்தித்தது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், சகீப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும், மொஹமட் சய்புதீன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதில், சகீப் அல் ஹசன், T20I போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். இதுவரையில், T20I போட்டிகளில் இலங்கை அணியின் லசித் மாலிங்க மாத்திரமே 100 விக்கெட்டுகளை (107) கடந்துள்ளார். அதுமாத்திரமின்றி, 100 T20I விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சுழல் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் சகீப் அல் ஹசன் பெற்றுக்கொண்டார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<