ஐந்து அறிமுக வீரர்களுடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள அவுஸ்திரேலியா

728
www.cricket.com.au

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாமில் ஆரோன் பின்ச் மற்றும் ட்ராவிஸ் ஹெட் உள்ளிட்ட ஐந்து அறிமுக வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அத்துடன்,  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிலென் மெக்ஸ்வல் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான அணிக் குழாமை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இன்று (11) அறிவித்தது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றிகள் – ஒரு மீள்பார்வை

முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் இல்லாத குழாமொன்றை தெரிவுசெய்வதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலிய தேர்வுக் குழு இறுதியில் ஐந்து அறிமுக வீரர்கள் கொண்ட குழாமொன்றை அறிவித்துள்ளது. முக்கியமாக அவுஸ்திரேலிய தேசிய அணியில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் மாத்திரம் விளையாடி வரும் ஆரோன் பின்ச் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோருக்கு இந்த தொடரில் டெஸ்ட் அறிமுகம் கிடைக்கவுள்ளமை முக்கிய அம்சமாகும்.

ஆரோன் பின்ச் இதுவரையில் அவுஸ்திரேலிய அணிக்காக 93 ஒருநாள் போட்டிகள் மற்றும் 43 T-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச நாடுகளில் நடைபெற்று வரும் முக்கிய T-20 லீக் போட்டிகளில் விளையாடும் இவர், வேகமாக துடுப்பெடுத்தாடக் கூடிய வீரர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். இவருடன் விக்கெட் காப்பாளர், சுழல் பந்து மற்றும் துடுப்பாட்டம் என சகல துறையிலும் பிரகாசித்து வரும் ட்ராவிஸ் ஹெட் அவுஸ்திரேலிய அணிக்காக 39 ஒருநாள் மற்றும் 16 T-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர்கள் இருவரும் மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான குழாமில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தாலும், முதல் முறையாக டெஸ்ட் குழாமில் இம்முறை இணைந்துள்ளனர்.

மேற்குறித்த இருவருடன், துடுப்பாட்ட வீரர் மார்னஸ் லபுசேன்ங் (Marnus Labuschagne) , வேகப்பந்து வீச்சாளர் மைக்கல் நீசர் மற்றும் பிரெண்டன் டொக்கட் (Brendan Doggett) ஆகியோரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். இதில் மார்னஸ் லபுசேன்ங் தென்னாபிரிக்காவில் பிறந்தவர் என்பதுடன், தற்போது அவுஸ்திரேலிய தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இதனிடையே, அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் மிக முக்கிய மாற்றமாக கிலென் மெக்ஸ்வலின் வெளியேற்றம் பார்க்கப்படுகிறது. வோர்னர் மற்றும் ஸ்மித் ஆகிய அனுபவ வீரர்கள் அணியிலிருந்து வெளியேறியுள்ள தருணத்தில், மெக்ஸ்வல் போன்ற சர்வதேச அனுபவம் கொண்ட வீரர் புறக்கணிக்கப்பட்டுள்ளமை கேள்வியை எழுப்பியுள்ளது. அதுவும் மெக்ஸ்வல் நடந்து முடிந்த உள்ளூர் செப்பீல்ட் சீல்ட் தொடரில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைச்சதம் அடங்கலாக 8 போட்டிகளில் விளையாடி, 707 ஓட்டங்களை (50.50 சராசரி) பெற்றிருந்தார். இப்படி இருக்கையில் அவரின் வெளியேற்றம் அணிக்கு எவ்வகையான முடிவுகளை வழங்கும் என்ற கேள்வியும் கிரிக்கெட் ஆர்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் திசர பெரேரா; மாலிங்க, சங்கா நீக்கம்

இதேவேளை இறுதியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ஜோ பேர்ன்ஸ், பீட்டர் ஹேன்ஸ்கோம்ப் மற்றும் ஜெய் ரிச்சட்சன் ஆகியோர் அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன்,  சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் ஷிட்டல் டெஸ்ட் குழாமில் இணைக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்க மாற்றங்களாக அமைந்துள்ளன.

அவுஸ்திரேலிய அணிக்குழாம்

டீம் பெய்ன் (தலைவர்), அஸ்டன் ஆகர், பிரெண்டன் டொக்கட், ஆரோன் பின்ச், ட்ராவிஷ் ஹெட், ஜோன் ஹோலண்ட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன்ங், நாதன் லையோன், மிட்ச்சல் மார்ஸ், ஷோர்ன் மார்ஷ், மைக்கல் நீசர், மெத்திவ் ரென்ஷாவ், பீட்டர் ஷிட்டல், மிட்சல் ஸ்டார்க்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…