இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில், 2010 ஆம் ஆண்டு கடைசியாக ஆஸி. ஒருநாள் அணியில் விளையாடிய பீட்டர் சிடில் இடம்பிடித்திருப்பதோடு மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சொந்த மண்ணில் தென்னாபிரிக்காவுக்கு எதிராகவும், இங்கிலாந்திலும் ஒருநாள் தொடர்களில் தோல்வியை சந்தித்த அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ண ஆண்டான இந்த ஆண்டில் ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையிலேயே அதிரடி மாற்றங்களுடன் 14 பேர் கொண்ட அவுஸ்திரேலிய ஒருநாள் குழாம் வெள்ளிக்கிழமை (04) அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைப்பாரா கோஹ்லி?
சிடிலுடன், டெஸ்ட் அணியின் சிறப்பு வீரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் நெதன் லியோன் ஆகியோர் ஒருநாள் குழாமில் இடம்பெற்றிருப்பதோடு, ஜெய் ரிச்சட்ஸன், ஜேசன் பெஹ்ரன்டோப் மற்றும் பில்லி ஸ்டான்லக் ஆகியோர் புதிய வேகப்பந்து வீச்சாளர்களாக சிடிலுடன் இணைகின்றனர்.
தென்னாபிரிக்காவிடம் 1-2 என தோல்வியை சந்தித்த அணியில் இடம்பெற்ற துடுப்பாட்ட வீரர்களான ட்ரவிஸ் ஹெட், கிறிஸ் லீன், டிஆர்கி ஷோர்ட் மற்றும் பென் மக்டோர்மட் அதே போன்று சகலதுறை வீரர் ஆஷ்டன் ஏகர் ஆகியோர் இந்த குழாமில் இடம்பெற தவறியுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்களான மிச்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வூட் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோருக்கு நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அடுத்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கீழ் முதுகுப் பகுதியில் உபாதைக்கு உள்ளான நெதன் கோல்டர்-நைல் அணியில் இணைக்கப்படவில்லை.
கடைசி போட்டியில் இருந்து விலக்கப்பட்ட ஆரோன் பின்ச் தொடர்ந்தும் ஒருநாள் அணித்தலைவராக நீடிப்பதோடு மிச்சல் மார்ஷ் மற்றும் அலெக்ஸ் கரே அவரது உப தலைவர்களாக உள்ளனர். ஷோன் மார்ஷ், சகலதுறை வீரர் கிலென் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் லெக்-ஸ்பின் பந்துவீச்சாளர் அடம் சம்பா ஆகியோர் தமது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
இதில் 34 வயதான சிடில் எட்டு ஆண்டுகளுக்கு முன் சிட்னியில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் கடைசியாக விளையாடியுள்ளார். இதுவரை 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் பிக் பாஷ் லீக் தொடரில் சோபித்ததை அடுத்தே நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணிக்கு திரும்ப முடிந்துள்ளது.
”2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக பீட்டர் சிடில் குழாத்திற்கு திரும்பி இருப்பது வியப்பானது. அவரது வெள்ளைப்பந்து கிரிக்கெட் காலம் செல்லச்செல்ல குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பதோடு, அவரது வலுவான தலைமைத்துவப் பண்பு மற்றும் தொழிமுறைக்கான சிறந்த பரிசாக அவரது தேர்வு உள்ளது’’ என்று அவுஸ்திரேலிய அணித் தெரிவாளர் டிரவோர் ஹோன்ஸ் தெரிவித்தார்.
அணியின் ஓட்ட எண்ணிக்கையில் தீர்க்கமான ஓட்டங்களை சேர்ப்பவராக உஸ்மான் கவாஜா இருப்பதாகவும் அவரது தேர்வு குறித்து ஹோன்ஸ் விபரித்தார்.
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் எதிர்வரும் 12, 15 மற்றும் 18 ஆம் திகதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன.
ஹரீனின் புது வியூகம் இலங்கை கிரிக்கெட்டுக்கு சாதகமாக அமையுமா?
அவுஸ்திரேலிய குழாம்
ஆரோன் பின்ச் (தலைவர்), உஸ்மான் கவாஜா, ஷோன் மார்ஷ், பீட்டர் ஹான்ட்ஸ்கொம்ப், கிலென் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிச்சல் மார்ஷ் (உப தலைவர்), அலெக்ஸ் கரே (உப தலைவர்), ஜெய் ரிச்சட்ஸன், பில்லி ஸ்டான்லக், ஜேசன் பெஹ்ரன்டோப், பீட்டர் சிடில், நெதன் லியோன், அடம் சம்பா
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<