நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு

296

நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து அவுஸ்திரேலியா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20i மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான T20i தொடர் பெப்ரவரி 21ஆம் திகதியும், 29ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட அவுஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட் கம்மின்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் மைக்கல் நெசர் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இதில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் மோரிஸ் காயம் அடைந்தார். அதேபோல, அந்த அணியின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனுக்கு இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஆறு வாரங்கள் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த 2 வீரர்களும் உபாதைக்குள்ளாகியதால் மைக்கல் நெசருக்கு வாய்ப்பளிக்க அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

33 வயதான வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான மைக்கல் நெசர், இதுவரை அவுஸ்திரேலியாவுக்காக 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இறுதியாக அவர், 2022ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

இதனிடையே, அண்மையில் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற டேவிட் வோர்னருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட மாட் ரென்ஷா, தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

2016 ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா அணி விளையாடும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பெப்ரவரி 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியா டெஸ்ட் அணி விபரம்

பாட் கம்மின்ஸ் (தலைவர்), ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நெதன் லையன், மிட்செல் மார்ஷ், மைக்கல் நெசர், மாட் ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<