அவுஸ்திரேலிய அணியில் 3 புதுமுக வேகப்பந்து வீச்சாளர்கள்

4947
Australia name three newcomers for upcoming tour of South Africa

அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை அவுஸ்திரேலியா 4-1 என கைப்பற்றியது. இந்த நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.

அதன்பிறகு அவுஸ்திரேலியா அணி தென் ஆபிரிக்க மண்ணில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டது.

அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜொஸ் ஹசில்வுட் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தொடரில் இடம் பிடித்திருந்த கவாஜா மோசமாக ஆடியதால் நீக்கப்பட்டுள்ளார். இலங்கை தொடரில் நீக்கப்பட்ட மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் அவுஸ்திரேலியாவில் விளையாடிய வோரல், ஜோ மென்னி மற்றும் விக்டோரியா வீரர் கிறிஸ் ட்ரெமெயின் ஆகியோர் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை தொடரில் 2ஆவது ஒருநாள் போட்டிகளுக்கு பின் ஓய்வெடுத்த அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

இதுவரை அவுஸ்திரேலிய மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் ஒருநாள் கிரிக்கட் அரங்கில் 91 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் 47 போட்டிகளில் அவுஸ்திரேலியா அணியும் 40 போட்டிகளில் தென் ஆபிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் சமநிலையில் முடிவு பெற்றுள்ளதோடு 1 போட்டி முடிவற்ற போட்டியாக நிறைவு பெற்றுள்ளது.

தென் ஆபிரிக்க அணிக்கு  எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரரகள் விவரம்

1. ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), 2. டேவிட் வார்னர் (உப தலைவர்), 3. ஜோர்ஜ் பெய்லி, 4. ஸ்காட் போலண்ட், 5. ஜேம்ஸ் போல்க்னர், 6. ஆரோன் பிஞ்ச், 7. ஜோன்  ஹாஸ்டிங்ஸ், 8. ட்ராவிஸ் ஹெட், 9. மிட்செல் மார்ஷ், 10. ஷோன் மார்ஷ், 11. ஜோ மென்னி, 12. கிறிஸ் ட்ரெமெயின், 13. மேத்யூ வடே, 14. டேனியல் வோரல், 15. எடம் சம்பா.

தென் ஆபிரிக்க – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியின் காலநேர அட்டவணை

  • 1ஆவது ஒருநாள் போட்டி – செப்டம்பர் 30 (செஞ்சுரியன்)
  • 2ஆவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 02 (ஜோஹன்னஸ்பர்க்)
  • 3ஆவது ஒருநாள் போட்டி –  ஒக்டோபர் 05 (டர்பன்)
  • 4ஆவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 09 (போர்ட் எலிசபெத்)
  • 5ஆவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 12 (கேப் டவுன்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்