T20 உலகக் கிண்ண அவுஸ்திரேலிய குழாத்தில் சிங்கப்பூர் வீரர்

321

நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாம் இன்று (01) அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

2022ஆம் ஆண்டின் T20 உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகின்றது. இந்த நிலையில் தொடரினை நடாத்தும் அவுஸ்திரேலியா 15 பேர் அடங்கிய தமது அணிக் குழாத்தை வெளியிட்டுள்ளது.

கடைசியாக நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட ஆரோன் பின்ச் தலைமையிலான அதே அணியே பாரிய மாற்றங்களின்றி, இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்திலும் அவுஸ்திரேலியாவிற்காக களமிறங்கவிருக்கின்றது.

அதன்படி கடந்த உலகக் கிண்ணத் தொடரில் ஆடிய சகலதுறைவீரர் மிச்செல் ஸ்வெப்ஸனிற்கு இம்முறை ஓய்வு வழங்கப்பட, அதிரடி துடுப்பாட்டவீரரான டிம் டேவிட் அவுஸ்திரேலியாவின் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெற்றிருக்கின்றார்.

சிங்கப்பூரை பிறப்பிடமாகக் கொண்ட டிம் டேவிட் மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் தேசிய கிரிக்கெட் அணிக்காக 14 T20I போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 46.50 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 558 ஓட்டங்களை குவித்திருக்கின்றார்.

கடைசியாக 2020ஆம் ஆண்டில் ஹொங் கொங் அணிக்கு எதிரான போட்டியில் சிங்கப்பூர் கிரிக்கெட் அணியினை கடைசியாக பிரதிநிதித்துவம் செய்த டிம் டேவிட், அண்மைக்காலமாக நடைபெற்று வரும் T20 லீக்குகளிலும் துடுப்பாட்டவீரராக தனது திறமையினை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

அதேபோன்று, தற்போது இடம்பெற்று வரும் ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரின்போது உபாதைக்கு உள்ளான மிட்செல் மார்ஷ், இந்த தொடரிலும், அடுத்து இடம்பெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் இருந்து விலகியிருக்கின்றார்.

எனினும், அனுபவ வீரரான மிட்செல் மார்ஷிற்கு தற்போது வெளியிடப்பட்டுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரிற்கான அவுஸ்திரேலிய குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று, அணியின் விக்கெட் காப்பாளர்களாக அனுபவ வீரர் மெதிவ் வேட்டுடன் அதிரடி ஆட்ட வீரர் ஜோஸ் இன்ங்லிஷ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேநேரம், அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணி இந்தியா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுடன் உலகக் கிண்ணப் பயிற்சிகளுக்காக T20I தொடர்களிலும் ஆடவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய T20 உலகக் கிண்ண குழாம்

ஆரோன் பின்ச் (தலைவர்), அஸ்டன் ஏகார், பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், ஜோஷ் ஹேசல்வூட், ஜோஸ் இன்ங்லிஷ், மிச்சல் மார்ஸ், கிளன் மெக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெதிவ் வேட், டேவிட் வோர்னர், அடம் ஷம்பா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<