அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் எதிர்வரும் 2021-2022ம் ஆண்டு காலப்பகுதிக்குள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் முன்னணி கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில், கடந்த 2009 ஆண்டு இலங்கை அணி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டிருந்தன.
14 நாட்கள் தனிமைப்படுத்தலை எதிர்க்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
ஆனால், மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட்டை மலரச் செய்யும் முகமாக ஜிம்பாப்வே அணி 2015ம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் சென்றிருந்தது. எனினும், 10 வருட இடைவேளைக்கு பின்னர் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தான் சென்றிருந்தன.
தற்போது உலகின் முதன்மை கிரிக்கெட் அணிகளை மீண்டும் நாட்டுக்குள் அழைத்துவருவதற்கான பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் பாகிஸ்தானில் விளையாடும் என்ற நம்பிக்கையை வசீம் கான் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட வசீம் கான், “இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எதிர்வரும் 2021-2022ம் ஆண்டு காலப்பகுதிக்குள் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. அதன்படி, தற்போதுள்ள சுகாதர பிரச்சினைகளை கவனத்திற்கொண்டு, வழமையாக நடைபெறும் வகையில், போட்டிகள் பாகிஸ்தானுக்கு திரும்பும்” என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஏஷான் மணி, கிரிக்கெட் விளையாடுவதற்கு பாதுகாப்பான இடமாக பாகிஸ்தான் மாறியிருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதுமாத்திரமின்றி, இதுவரையில் ஐக்கிய அரபு இராட்சித்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கான போட்டிகள் இனி அங்கு நடைபெறாது எனவும் அறிவித்திருந்தார்.
Video – இலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்கள்..! |Sports RoundUp – Epi 131
ஐக்கிய அரபு இராட்சித்தில் தங்களுடைய போட்டிகள் நடைபெறுவதால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதுடன், அதிகமான பங்கினை இழக்கவும் நேரிட்டிருந்தது.
உலகில் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார சிக்கல்கள் காரணமாக ரசிகர்களை மைதானத்துக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும், பாகிஸ்தான் அணி எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதேநேரம், அடுத்த ஜனவரியில் முன்னணி அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் மூன்று T20I போட்டிகளில் விளையாடவும் பாகிஸ்தான் அணி எதிர்பார்த்துள்ளது.
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…