தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவந்த வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் சம்பியனாக 12ஆவது தடவையாக அவுஸ்திரேலியா அணி மகுடம் சூடியுள்ளது.
தொடர்ச்சியாக 9ஆவது தடவை வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணி முன்னேறியிருந்ததுடன், அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதன்முறையாக இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.
- சிங்கபூரிடம் தோல்வியடைந்த இலங்கை வலைப்பந்தாட்ட அணி
- இலங்கைக்கு மற்றொரு மோசமான தோல்வி!
- நான்காவது காற்பகுதி அபாரத்தால் இலங்கைக்கு திரில் வெற்றி
விறுவிறுப்பாக ஆரம்பமான இந்த இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் முதல் காற்பகுதியில் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியிருந்தன. அதன்படி முதல் காற்பகுதி 13-13 என சமனிலையில் முடிவடைந்தது.
தொடர்ந்து ஆரம்பித்த இரண்டாவது காற்பகுதியும் சற்று விறுவிறுப்பாக ஆரம்பித்த போதும் உலகின் முதல் நிலை அணியான அவுஸ்திரேலிய அணி 14-10 என இரண்டாவது காற்பகுதியை கைப்பற்றியது.
நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலைப்பெற்ற நிலையில் மூன்றாவது காற்பகுதியை அவுஸ்திரேலியா ஆரம்பித்தது. மீண்டும் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட அவுஸ்திரேலிய அணி 19-13 என முன்னிலைப் பெற்றுக்கொண்டதுடன், 46-36 என போட்டியை 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தமது பக்கம் திருப்பியது.
குறித்த இந்த முன்னிலைகளை பயன்படுத்திக்கொண்டு மேலும் 15 புள்ளிகளை பெற்றுக்கொண்ட அவுஸ்திரேலிய அணி ஆட்டத்தின் இறுதியில் 61-45 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
அவுஸ்திரேலிய அணி கடைசியாக 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றிருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு ஒரு புள்ளி வித்தியாசத்தில் கிண்ணத்தை தவறவிட்டிருந்தது. தற்போது மீண்டும் பலமான அணியாக களமிறங்கி கிண்ணத்தை தம்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<