பாலியல் சர்ச்சையினால் பதவி விலகும் அவுஸ்திரேலிய அணித்தலைவர்

1297
Getty Images

பாலியல் சர்ச்சை (Sexual Scandal) ஒன்றுக்கு முகம்கொடுத்ததனை அடுத்து அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான டிம் பெய்ன் தனது பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

>>முதல் T20 போட்டிக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு வேலை செய்த பெண்ணொருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் டிம் பெய்ன் அனுப்பிய குறுஞ்செய்திகள் (Texts) விசாரணைகள் மூலம் தற்போது பூதாகரமாக மாறியிருக்கும் நிலையிலையே, டிம் பெய்ன் பதவி விலகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய அணியினை டெஸ்ட் போட்டிகளில் வழிநடாத்தும் டிம் பெய்ன், தற்போது பதவி விலகியிருப்பதனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஏற்றுக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருப்பதோடு, விரைவில் டெஸ்ட் அணியின் புதிய தலைவர் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

எனினும் டிம் பெய்ன் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்காக தொடர்ந்து வீரராக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருப்பதுடன் அடுத்த மாத ஆரம்பத்தில் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையில் நடைபெறவிருக்கின்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடரிலும் டிம் பெய்ன் அவுஸ்திரேலிய அணியினை வீரர்களில் ஒருவராக பிரதிநிதித்துவம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் மிக்கி ஆர்தர்

தான் தலைவர் பதவியில் இருந்து விலகுகின்ற முடிவு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டிம் பெய்ன், இது மிகவும் ஒரு கடினமான ஒரு முடிவு எனத் தெரிவித்திருந்ததோடு இந்த முடிவு தனக்கும், தனது குடும்பத்திற்கும் கிரிக்கெட்டிற்கும் சரியான முடிவாக இருக்கும் எனக் கருதுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேவேளை, அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் அடுத்த தலைவராக பெட் கம்மின்ஸ் தெரிவு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<