கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த அவுஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கன்னி டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக ஜனவரி மாதத்தில் நடக்கவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி விளையாட மறுத்திருந்தது. இந்த அறிவிப்பு நேற்று வெளியாகியிருந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை நவம்பரில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
ஒரே தினத்தில் முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுக்கும் இரு பாகிஸ்தான் வீரர்கள்
மேற்கு அவுஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன், தனிமைப்படுத்தல் நாட்களில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் அனுமதிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பேர்த்தில் கிரிக்கெட் தொடர்களை நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை செய்தி வெளியிட்டுள்ளதுடன், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20I போட்டிகள் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.
“நாம், நட்பு கிரிக்கெட் சபைகளான ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் சபைகளுடன் தொடரை அடுத்த பருவகாலத்தில் நடத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகள் தளர்த்தப்படும் பட்சத்தில் தொடரை நடத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எண்ணுகிறோம்” என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிக் ஹொக்லி குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாம் இந்த பருவகாலத்துக்கான போட்டிகளை நடத்துவதற்கு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்கள் என்பவை தொடர்பில் இரண்டு தரப்புகளிடம் கலந்துரையாடி முடிவை எட்டும் பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் தொடர்களை நடத்த முடியும்.
Video – எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திய RCB | Cricket Galatta Epi 36
அதேநேரம், முழு அட்டவணையின் கீழ், இந்திய அணி இந்த பருவாகலத்தில் விளையாடும் என எதிர்பார்ப்பதுடன், அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம். மூன்று விதமான போட்டிகளிலும் இந்திய அணி விளையாடினால், மிகவும் சிறப்பாக அமையும்.
அதேநேரம், ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு இடையிலான உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான பங்களிப்பை வழங்கிவரும் எமது பங்குதாரர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறிக்கொள்ள விரும்புகிறோம்” என்றார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<